Wednesday, November 7, 2012

அன்றேநான் சொன்னனே கேட்கவில்லை -கைது ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை




அன்றேநான் சொன்னனே  கேட்கவில்லை கைது
    ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை
ஒன்றேதான் இதற்குவழி உறுதி! வெல்வோம் நாம்
    ஒன்றுபட்டு ஒருகுரலாய் ஒலிக்க சொல்வோம்!
நன்றேதான் நாம்கூடி திட்டமிடுவோம் ஏற்ற
    நாள்தன்னை வலைதன்னில் எட்டவிடுவோம்
என்றேநான் உறவுகளே தூண்டுகின்றேன் -செய்ய
    எவர்வரினினும் தலைவணங்கி வேண்டுகின்றேன்

யார்செய்தார் என்பதல்ல இந்தப்பணியே இதை
      இப்படியே விட்டாலே தொற்றும்பிணியே
சீர்செய்ய முயல்வார்க்கு கைகொடுப்போம் கூடி
    சிந்தித்து செயல்பட முடிவெடுப்போம்
பேர்பெறவா! அல்லயிது உரிமைக்காக்க-அறப்
     போராடி நாடிவரும் துன்பம்போக்க
தேர்தன்னை பலர்கூடி இழுத்தல்போல-உடன்
     திரளுங்கள் உறவுகளே நாளும்சால
                               புலவர் சா இராமாநுசம்


தருமி அவர்கள் தங்களுடைய வலைப்பூவில்(blog) கூறிஇருந்தார் அது அப்படியே அனைவருக்காகவும் அறிந்து கொள்ள கிழே அப்படியே தந்து உள்ளேன் அனைவரும் இந்த செய்தியை பதிவிடுவோம்,,,

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம்(book) எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

Tuesday, November 6, 2012

மதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் காப்பாயா



 எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

               மீள்பதிவு

                                      புலவர் சா இராமாநுசம்

Thursday, November 1, 2012

சீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே!?




நீலம் புயலும் வந்தாயே மக்கள்
   நிம்மதி இழக்கத் தந்தாயே!
காலன் வருவதாய் ஆயிற்றே-பெரும்
   காற்றொடு மழைவர போயிற்றே!
ஆலம் விழுதொடு ஆடியதே கடல்
   அலைகள் ஊருக்குள் ஓடியதே!
சீலம் ஆல்ல உன்செயலே ஏன்
    செய்தாய் இப்படி வன்புயலே!?


வாழைகள் முறிந்து வீழ்ந்தனவே உழவர்
    வயிரும் பற்றி எரிந்தனவே!
ஏழைகள் குடிசைகள் அழிந்தனவே-அவர்
     இருவிழி நீரைப்  பொழிந்தனவே!
பேழையுள் பாம்பென முடங்கினரே-ஏதும்
     பேசவும் வழியின்றி அடங்கினரே!
கோழைகள் அவராம் என்செய்வார்-உதவி
     கொடுத்தால் தானே! இனிஉய்வார்!


விளைந்த நெல்லும் மூழ்கியது நாற்றும்
    வேரெடு எங்கும் அழுகியது!
வளைந்த கதிர்நெல்  கொட்டியதாம்-இனி
    வாழ்வே உழவர்க்கு எட்டியதாம்!
தளர்ந்தவன் கைகள் மடங்கிவிடின்-உலகம்
    தாங்குமா பசிபிணி ஓங்கிவிடின்!
களைந்திட வேண்டும் அரசிதனை உடன்
    கடமையாய் எண்ணி அரசதனை!

                               புலவர் சா இராமாநுசம்
  

                                                                   

        

Wednesday, October 31, 2012

விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்



தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ 
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்

            கல்லூரியில்  படித்தபோது எழுதிய கவிதை!

Friday, October 26, 2012

ஊற்றாகிப் போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே




ஊற்றாகிப் போயிற்றே  ஊழல்தான் ஆயிற்றே
காற்றாக எங்கெங்கும் காண்கிறதே மாற்றாக
ஏதும் வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே
மோதும் துயர்தான் துணை

இன்னாரென் றில்லை! எவரென்றும் பேதமில்லை!
ஒன்னாராம்  என்பதில்லை! ஒன்றேதான் தன்னாலே
வாய்த்த வழியெல்லாம்  வாங்குவதே நோக்கமெனில்
காய்த்த மரத்திற்கே கல்லு

கணகிட்டே  காசுதனைக் கையூட்டாய்  கேட்டே
சுணக்கமின்றி செய்வதாக சொல்லி குணக்குன்றாய்
கூசாது வேடமிட்டே கூறுகின்றார் அந்தந்தோ
பாசாங்கே செய்வதவர் பண்பு

அஞ்சாமல் தேர்தலிலே அள்ளியள்ளி  செல்வத்தை
பஞ்சாக விட்டாரே பார்தோமே நெஞ்சார
எண்ணிப்பார்ப் பீரா எவர்மீதே தப்பென்றே
உண்ணினால் வந்திடுமே உண்மை

நோட்டுக்கே  வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
நாட்டுக்கே  வந்தாரே நாடாள !கேட்டுக்கே
ஏற்ற  வழிதன்னை ஏற்படுத்தித் தந்தோமே
மாற்றம் வருமா மதி

எந்தத் துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
வந்த நிலையுண்டா?வாய்ப்புண்டா! தந்தவரே
ஓங்கி ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான் இங்கே பகை



               புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 24, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!



எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!




ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

    திருமிகு இரஜினி பிராதாபும், வேறு சில உறவுகளும்
வெண்பா வேண்டுமென விரும்பி கேட்டதால் இன்று, இது
மீள் பதிவு. விரைவில் புதியன வரும்.
                                  புலவர சா இராமாநுசம்



Monday, October 22, 2012

இருப்பது எத்தனை நாளே! –அதனை இயம்பிட இயலா! வாளே




முகமது அறியா நிலையில் வாழ்த்து
    மொழிந்திட எனது வலையில்
அகமது கொண்டே வந்தார் என்
   அகமிக மகிழத் தந்தார்!
இகபர இன்பம் பெற்றே நாளும்
    இன்றுபோல் என்றும் உற்றே!
செகமதில் வாழ்க நன்றும் அவர்
    சிறப்புற்று வாழ்க! என்றும்

பிறந்தநாள் இருந்த சுற்றம் விட்டுப்
    பிரிந்திட என்னை! மற்றும்
மறந்திட இயலா உறவே நாளும்
    மறுமொழி வழியாய் வரவே
சிறந்தநல் வாழ்வே பெற்றேன் தூய
    செந்தமிழ்  தன்னைக் கற்றேன்!
திறந்தநல் மனமே  கொண்டேன் வந்த
     தீமைகள் ஓடக் கண்டேன்!

தென்னையாய் வாழ வேண்டும் வாழ்வே
     தெளிந்தநல் நீராய் யாண்டும்!
பொன்னெனப் போற்றப் பலரும் எழில்
     பொங்கிடப் பூத்த  மலரும்
கன்னலின்  சுவையே போன்றும் முக்
    கனிதரும் இனிமை யான்றும்
என்னையே மாற்றிக் கொள்வேன்! நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!

இருப்பது எத்தனை  நாளே! அதனை
    இயம்பிட இயலா! வாளே
அறுப்பது நமது உயிரே என
    ஐயனும்  மொழிந்த  உரையே!
பொறுப்பது கொண்டே எதிலும் சற்று
   புன்னகை பூக்க பதிலும்
வெறுப்பது இன்றி சொல்வீர்-செய்யும்
   வினையெலாம் நீரே வெல்வீர்!

                    புலவர் சா இராமாநுசம்
   


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...