Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!



மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே
     மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!
புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்
    புலம்புகின்றார் கண்டபடி பாவம்! மேலும்,
எத்னையோ பணியிருக்க அதனை விட்டே
    எண்ணாமல் ஆயாமல் வேலைக் கெட்டே!
பித்தமது பிடித்தவராய் மாற்றி வீணே
    பேசுகின்றார் ஐயகோ! நியாயம் தானோ!?


ஆண்டாண்டு காலமாக  இருக்கும்  ஒன்றே
      அறியாது ஐயகோ  மாற்றல்  என்றே!
தூண்டாதீர்  மதவெறியை  அமைதி  கெடுமே
      தொடராது  இனியேனும்  வாழ  விடுமே!
வேண்டாத  வீண்வேலை ஆகும் தானே
       விடுமுறையே இல்லையென பின்பு, தானே
கூண்டா மக்களது  எதிர்புக்   கண்டே
      கூறவில்லை என்பதுவா  மக்கள்  தொண்டே!

 புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 17, 2014

மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!


மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரக் கட்டணமோ எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்!


ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி ஏற்றி விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -மேலும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, December 15, 2014

தூய்மை வருமே துணை!


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 12, 2014

சீண்டாதீர் நாளும் செய!



ஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்
சாற்றுவது மட்டும் சரியாகும் !- மாற்றுங்கள்!
வேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே
சீண்டாதீர் நாளும் செய!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 11, 2014

பட்டுவிடும் ஒற்றுமையே பார்!



விழியேதும் இல்லான் விருப்பம்தான் காண!
வழியேதும்  இல்லாத ஒன்றே !– மொழியென்றா!
திட்டமிட்டே செய்கின்றார்! தேவையில்லை !செத்தமொழி
பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 9, 2014

பேறாகு மென்றேதான் பேசு!



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலேதான்!-தொல்லுலகில்!
மாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்
பேறாகு மென்றேதான் பேசு

புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 8, 2014

எண்ணையின்றி ஏற்ற விளக்கு!



வாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்
ஏழைக்கும் ஆயிற்றே வாக்குரிமை!- கோழையவன்,
மண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்
எண்ணையின்றி ஏற்ற விளக்கு

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...