Friday, January 16, 2015

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !



மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்

Thursday, January 15, 2015

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!



தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்க லிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்தி டுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய  வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்

Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்


ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!


கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!



அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை
அரசியல் மாற்ற காட்சி!
வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி
வெள்ளமாய் அடிக்க எண்ணீர்!
ஒழிந்தது ஆணவக் ஆட்சி –இன்று
உலகமே போற்றும் மாட்சி!
கழிந்தநாள் மறப்ப தல்ல-அவை
கனவென நினைத்துத் தள்ள!


வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
வந்திட நெஞ்சில் ஒன்றே!
பெருமாட்சி செய்யத் தானே-சற்று
பெருமூச்சு எழவும் வீணே!
தருமாட்சி நன்றாய் காண –ஈழத்
தமிழரும் உரிமை பூண!
திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை
திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!


அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த
ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்!
எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி
எழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே!

கோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்
கும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-!
நோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல
நோக்கமில்லார்! இவருக்கு இல்லை நிகரே!

தேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி
தேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்!
நாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று
நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, January 4, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக !



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
நிலையாக தடையின்றிப் பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைவது உண்டே
செயற்கையால் வருவதே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – வந்து
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

Friday, January 2, 2015

முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்!


முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்-நாளும்
முன்னேற மக்களவர் முயற்சி, செந்தேன்!
தன்பணி என்னவென அறிந்துக் கொண்டே- அவர்
தவறின்றி உழைக்கின்ற அழகுக் கண்டே!
என்பணி விரிவாக எழுத வேண்டும்- ஆனால்
இயலாமை! முதுமை !முடக்க ஈண்டும்!
பின்பதனை முடிந்தவரை எழுது கின்றேன் –சிலநாள்
பொறுத்திடுவீர்! உறவுகளே தொழுது நின்றேன்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...