Saturday, March 14, 2015

அன்பின் இனிய உறவுகளே! ஓர் அறிவுப்பு !





அன்பின்  இனிய  உறவுகளே!
       ஓர்  அறிவுப்பு !
கடந்த  சில  நாட்களாக  என்னுடைய வலை  முகவரியான pulvarkural.info என்பது தடை பட்டுள்ளது  பலவகையில்  முயன்றும்  இன்றுவரை சரிசெய்ய  இயலவில்லை! அதன்  பின்னர்
நண்பர்  திண்டுக்கல் தனபால்  அவர்களின்  உதவியால், என்  பழைய
  http://www.pulavarkural.blogspot.com/என்பதைக்  கொண்டு  தற்போது  வெளிவருகிறது !ஆகவேதான்  பலருடைய  வலைப்பதிவில் என்னுடைய  புதிய பதிவுகள் தெரியவில்லை பலரும்  இதுபற்றி
கேட்பதால் இங்கே விளக்கம்  தந்துள்ளேன் விருப்பம்  உள்ளவர்கள்
தங்கள் வலையில் http://www.pulavarkural.blogspot.com/ என  மாற்றிக் கொண்டால் ஒரு  வேளை  தெரியலாம்.மேலும் , உதவிய  தனபாலுக்கும் இதன் மூலம்  நன்றி,
தெரிவித்துக்  கொள்கிறேன். ஏற்பட்ட  இடையூறுக்கு  வருந்துகிறேன்
   
புலவர் சா இராமாநுசம்

Friday, March 13, 2015

முகநூல் தந்த துணுக்குகள்!




தாயின் அன்பு கடல் போன்றது! எப்படியென்றால் காவிரியின் நீரை ஏற்றும் கொள்ளும் கடல் கூவம் ஆற்று நீரை வேண்டாமென்றா தள்ளி விடுகிறது! இல்லையே! அதுபோல தான் பெற்ற மக்களில் ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் தாயுக்கு மட்டுமே உண்டு!

இன்று, அரசியல் ஒரு தொழிலாகி விட்டது! இதற்கு முதலோ, உழைப்போ தேவையில்லை! பணத்தைத் தேடவேண்டிய அவசியம் கூட இல்லை! அது தானேத் தேடிவரும்!அரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன! இது எங்கு போய் முடியுமோ!!!?

உறவுகளே!
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பதே பெரும் பாலும் இல்லாமல் போய்விட்டது! எனவே ,குடும்பத்தில் வாழ்வோர் எண்ணிக்கை சுருங்கி விட்டது! குடும்பம் என்பதே ஒருவர் கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதை குடும்பத்தில் உள்ளவர் உணரவேண்டும்! தேவை வரும்போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் இல்லம் அமைதி காணும்

பணக்காரன் பக்கம்தான் ஊரும் செல்கிறது என்பது உண்மைதானே!
அதனால்தான் அவர்கள் எதையும் செய்வற்கு அஞ்சுவதோ, வெட்கப் படுவதோ அறவே இல்லை

                    புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 10, 2015

உலகப் பெண்கள் தினம்!

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையெங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்        மீள் பதிவு

Sunday, March 8, 2015

திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர் தினமான இன்றிதனைப் போற்ற வேணும்!


அர்த்தநாரி ஆண்டவனே உடலைத் தந்தான் –எதற்கு????
ஆய்வதற்கா!?! அவதாரம் எடுத்து வந்தான்
சரிபாதி பெண்களென உணர்த்தத் தானே –இதனை
சரியாகப் புரிதலில்லா ஆண்கள் வீணே!
மறுபாதி பெண்களென உரிமைத் தருவீர்-வாழ்வில்
மட்டற்ற மகிழ்வினையே என்றும் பெறுவீர்
திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர்
தினமான இன்றிதனைப் போற்ற வேணும்


தோன்றியநாள் முதலாக அடிமை யாக்கி –வாழத்
துணையாக வந்தவளின் துயரைப் போக்கி
சான்றெனவே ஆண்மக்கள் விளங்க யாண்டும்- எதிலும்
சமபங்குப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்
ஊன்றுக்கோல் ஒருவர்க்கு ஒருவர் ஆமே –என்ற
உண்மைதனை இருவருமே உணர்ந்து தாமே
ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

Friday, March 6, 2015

முகநூல் வித்துக்கள்!


  புலவர்  குரல்
------------


மிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்களே சமுதாயத்தில் வாழவும் முன்னேறவும் முடிகிறது! அதுமட்டுமல்ல! அவர்களே வாழத் தெரிந்தவர்களாக உலகம் சொல்கிறது ! செய்த ,சிறு தவற்றையும் பெரிதாக்கிக் கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருந்தால் இந்த காலத்தில் வாழமுடியாது

சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை!
ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!


உண்மையான காதல் தன்னலமற்றது! மற்றவருடைய இன்பத்தில் தான் இன்புறுவதும் துன்பங் கண்டு தான் துன்புறுவதும் என்று இருப்பதே காதலின் தூய்மைக்கு உரிய அடையாளமாகும்

வாழ்க்கையில் தவறே செய்யாதவர்களைக் காண்பது அரிது! தவறு செய்பவர்கள் அனைவரையும் திருத்திவிட இயலாது ! திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும்! கிளிக்குத் தான் பேசக் கற்றுத் தரமுடியும் ! குருவிக்கிக் கற்றுத் தர இயலுமா?

பிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்! அதாவது அன்பு என்பது அதையே கொடுத்து பெற வேண்டிய ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 4, 2015

நடப்பதிலே எதுவுமே தெளிவு , காணோம் – மக்கள் நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!




மாண்புமிகு  பிரதமருக்கு  எதிரி யாக-இங்கே
  மற்றவர்கள்  யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே  ஆடுவது  அவரின் கட்சி- நாளும்
  தவறாகப்  பேசுவதே அதற்கே  சாட்சி!

முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
   முறையற்றுப்  பேசுவதும்  சாரமே யின்றி!
என்னவெனக்  கேட்கின்றார்  நல்லோர் தாமே-பிரதமர்
   ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே  கட்டுப்பாடு  அணுவு மில்லை –யார்
  காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
   அமைச்சருக்கு இதனால்  ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
    ஆள்வதற்குச்  செய்வதவர்  உரிய  கடனே!
நடப்பதிலே  எதுவுமே  தெளிவுகாணோம் – மக்கள்
   நம்பிக்கைக்  குறைகிறது  தீர்வு  வேணும்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 2, 2015

வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே



வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை
வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே
தந்ததைய்யா ஐயகோ ! மத்திய ஆட்சி-நடுத்
தரமக்கள் அழுகையே இதற்குச் சாட்சி

ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டும்!-மேலும்
ஏற்றமெனில் !அவர்விழியில் இரத்தம் சொட்டும்
தீர்க்கவழி பாருமய்யா! வாழ விடுவீர்-என்ன
தொடர்கதையா?வேண்டாமே ! பின்னர் படுவீர்!

தேவைவரி மறுக்கவில்லை! இதுதான் முறையா?-மக்கள்
தினந்தோறும் பயன்படுத்தும் பொருளும் குறையா
சேவைவரி உயர்த்தியதும் முற்றும் சரியா –உடன்
சிந்திப்பீர்! இல்லையெனில் விலையே குறையா

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...