Friday, March 31, 2017

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!



ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 29, 2017

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென!



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Monday, March 27, 2017

கோடைக் காலம் வந்து துவே -எங்கும் கொளுத்திட வெய்யில் தந்த துவே !




கோடைக் காலம் வந்துதுவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்ததுவே !
ஆடை முழுதும் நனைந்திடவே -உடல்
ஆனதே குளித்த தாய்ஆகிடவே !
ஓடை போல நிலமெல்லாம்- காண
உருவம் பெற்று வெடித்தனவே !
வீ(ட்)டை விட்டே வெளிவரவே -மனம்
விரும்பா நிலையை அனல்தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கிடவே -அற
பசுமை முற்றும் நீங்கிடவே !
உச்சியில் வெய்யில் வந்ததெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்டதனல் !
மூச்சை இழுத்தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயிலென -வெதும்பி
செப்பிட வார்தை செவிவிழுமே !

பத்து மணிக்கே பகல்தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும்மண்ணில் !
எத்தனை வேகம் காட்டுகின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடுகின்றார் !
இத்தனை நாள்போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்குஇந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக்குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக்குள்ளே !

வற்றிய நீர்நிலை இல்லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல்லாமே !
பற்றி எரிய முற் றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ்சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றிடவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசியாலே !

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 22, 2017

விருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே!







வருந்தி எழுதினேன் தமிழ்  மணமே—முறையாய்
   வாரா நிலையைத்  தமிழ்  மணமே
திருந்தி  வரவும் கண்டு  விட்டேன்-நன்றி
   தெரிவிக்க  கவிதையும் விண்டு விட்டேன்
மருந்தே ஆகிட  உண்டு  விட்டேன்-மனதின்
   மகி.ழ்வினை இங்கே சொல்லி  விட்டேன்
விருந்தென  வந்தாய்  தமிழ்  மணமே-போற்றி
   விளம்பினேன் நன்றியும் தமிழ்  மணமே

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 21, 2017

ஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ!? தமிழ்மணமே!




ஏனோ தானோ என்றேதான்-நாளும்
நடப்பது நன்றோ!? தமிழ்மணமே
தேனாய் இனித்திட பதிவுகளை-முறையாய்
தினமும் பட்டியலை தருவாயே
ஆனால் என்னவோ ஆயிற்றி—வீணாய்
அம்முறை முற்றிலும் மாறிற்று
நானே அனுப்பிய பலபதிவை-ஏற்றும்
பட்டியல் தன்னில் பதிவில்லை!


புலவர் சா இராமாநுசம்

கடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப
பாடலை இயற்றியவருக்கோ.அதனை பாடியவருக்கோ ஏதும் இல்லாமல் ( இராயல்டி) இசையமைப்பாளருக்கே
உரியது என்பது முறையாகப் படவில்லை! சம்மந்தப் பட்டவர்கள் கலந்து பேசி முடிவு காண்பதே நன்று!

கேள்வி---?
இன்று நமிழ் நாட்டில் நினைத்த வுடன் எளிமை யாக செய்யகூடிய பணி என்ன!?
பதில்----
ஏதேனும் ஒரு கட்சி தொடங்குவது!

உறவுகளே! சில ஆண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யப்படும் வரவு செலவு திட்ட அறிக்கைகள் வெறும் சடங்காக போய்விட்டது !ஆகவே மக்கள் அதனை பற்றி
அதிகம் கவலைப்படுவதில்லை !இவ்வாண்டும் அதே நிலைதான்

உறவுகளே!
திடீர் தீபாக்களும், திடீர் கட்சிகளும் தோன்றி வலம் வரும் அளவுக்கு,தமிழக அரசியல் தரம் தாழ்ந்த நிலைக்கு போயுள்ளது கண்டு வெட்கப் படுவதா! வேதனைப் படுவதா!? யாரை நோவது!

எத்தனைதான் முயன்றாலும் செயலலிதாவின் மர்ம மரண
உண்மைகள் வெளிவரப்போதில்லை ! காரணம்
அதில் மத்திய அரசும் ஓரளவு சம்பந்தப் பட்டுள்ளது!

நடப்பது நடக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம் என்று
நாளும் பணியாற்றுவது தான் ஒருவருக்கு அழகு! அது மட்டுமல்ல அறிவும்
ஆகும்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 20, 2017

கொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி நான்உய்வேன்!



கொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன்
கொடுமையில் தப்பி நான்உய்வேன்
கசியா இரத்தம் உண்மைதான்-ஆனால்
கடித்தபின் அரிக்கும் தன்மைதான்
நிசியா பகலா என்றில்லை-துயிலும்
நீங்கிட வாட்டுதல் நன்றில்லை
வசியா இடமெது காட்டிவிடு-இன்றேல்
வாயை மூடியே ஓடிவிடு


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...