நித்தம் ஒருகவிதை
நிலையாக எழுதிவிட
சித்தம்
இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை!
முதுமை
முன்னாட முதுகுவலி பின்னாட
பதுமை
ஆகிவிட்டேன் பதிவெழுதா நிலைபட்டேன்!
மோனை எதுகையென முறையாக
எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்றுப்
போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு
யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கைப் போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!
படிப்பவரும்
குறைந்துவிட்டார் பலபேரைக்
காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!
உடலுக்கே சோதனைதான்
உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே அலைபோல
கவலையிலே மனமோயா!
மாற்றுவழி தேடினேன்
முகநூலால் தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?
ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை மறந்தாரை யாம்மறக்க
மாட்டோமால்!
சிந்தனையின்
துளிகளெனச் சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்
பலநூறாம் வருகின்றார் தினந்தோறும்!
விந்தையதில்
என்னவெனில் விரிவாக சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!
வலைதன்னில்
காணாத பலபேரும் அங்கே
நிலைகொண்டு எழுதியே
பெற்றார்கள் பங்கே
பிறந்த
இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம்
மறந்து விடுவேனா
மறுபடியும் வருவேனே!
புலவர் சா இராமாநுசம்