Showing posts with label அகப்பொருள் பற்றி எழுதியது கல்லூரியில் படித்தபோது கவிதை புனைவு. Show all posts
Showing posts with label அகப்பொருள் பற்றி எழுதியது கல்லூரியில் படித்தபோது கவிதை புனைவு. Show all posts

Monday, March 11, 2013

நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும் நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்

            புலவர் கல்லூரியில்  படித்த போது
                                    எழுதியது


      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்
      
      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்
      
      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்
           
              புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...