Showing posts with label கவிதை அறப்போர் திரளுதல். Show all posts
Showing posts with label கவிதை அறப்போர் திரளுதல். Show all posts

Saturday, December 24, 2011

நாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்



தலைநகர் வாழும் தமிழர்களே-நாளை
    தன்மானம் காப்போம் திரளுங்கள்
அலைகடல் சீரணி அரங்கத்தின்-முன்
    அலையலை எனவே வாருங்கள்
நிலைபெற முல்லை அணைகட்டும்-உரிய
   நீதியின் குரலே முழங்கட்டும்
இலையிடம் துளியென கூடட்டும்-கேரள
    எதிரிகள் மிரண்டு ஓடட்டும்

உடைப்போம் அணையை என்கின்றார்-இது
    உறுதி உறுதி என்கின்றார்
எடுப்போம் அனைவரு உறுதிமொழி-நம்
   எதிர்பை காட்டும்  இறுதிவழி
தடுப்போம் உயிரைக் கொடுத்தேனும்-வீரத்
   தமிழனாய் வாழ்வோம் இனியேனும்
தொடுப்போம்  அறப்போர் திரளுங்கள்-பலி
    தேவையா ஆள்வோர் கூறுங்கள்

எங்கும் மக்கள் வெள்ளமென-கண்
    எட்டிய வரையில் சொல்லவென
பொங்கிய கடலாய் பொங்கட்டும்-மக்கள்
    புரட்சியின் குரலே ஓங்கட்டும்
சிங்கம் போன்றே எழுவீரே- பெரும்
   சென்னை மாநகர் வாழ்வோரே
அங்கம் துடித்திட  வாருங்கள்-சீரணி
   அரங்கத்தின் முன்னே திரளுங்கள்
           
                      புலவர் சா இராமாநுசம்
  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...