Showing posts with label சேனல் நான்கு துயரம் கவிதை. Show all posts
Showing posts with label சேனல் நான்கு துயரம் கவிதை. Show all posts

Wednesday, February 1, 2012

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு!



வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...