Tuesday, December 1, 2015

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????


அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, November 29, 2015

போதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமி



போதுமடா சாமி –நாங்க
பொழைக்கவழி காமி
சேதமதிக மாச்சே –ஏதும்
செய்யமுடி யாபோச்சே

அளவுமிஞ்சி போனா –எதிலும்
அழிவுவரும் தானா
களவுபோன பொருளே –உடன்
காட்டுமுந்தன் அருளே

 மேலும்வரு     மென்றே-பயம்
மேலும்வர நன்றே
மூளுமச்சம் நெஞ்சில்-தீயை
மூட்டுவதா பஞ்சில்

கருணைகாட்டு சாமி –உடன்
காக்கவாரும் பூமி
வருணதேவன் பாரும் –எங்கள்
வாழ்கைதனை காரும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 18, 2015

மாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!


உறவுகளே வணக்கம்!
நான் முன்பே எழுதியதைப் போல இவ்வளவு மழை பெய்தும் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரிமட்டும் முழு அளவினை
எட்டவில்லை மற்ற ஏரிகள்( சோழவரம், பூண்டி, செம்பரம் பாக்கம்) நிரம்பியதோடு உபரி நீர் வெளியேறி வெள்ளச்சேதம் ஏற்படத்தியுள்ள செய்திகளை அனைவரும் அறிவீர்! இதனால் தெரிவது புழல் ஏரிக்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளநிலைமை உள்ளங்கை நெல்லிக்கனி என்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது
ஆகவே எதையும் துணிவோடு செய்யக்கூடியவர் என பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், பழைய கோப்புகளை எடுத்து ஆய்வு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும், யாரானாலும் எந்த கட்சி ஆனாலும் தயவு காட்டாமல் போர்கால அடிப்படையில் உடனடி அகற்ற நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம் இதுதான் உரிய தருணம் நாள் தள்ளிப் போனால் ஆறின சோறு ஆகிவிடும் மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்! செய்வீகளா!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 14, 2015

என் முகநூல் பதிவுகள்!




உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது! குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர
வைத்தூறு போலக் கெடும்- குறள்

கரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும்! ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும்! நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்! அமைய வேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 10, 2015

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக!


பீகாரில் பா.ஜ. கா தோல்வி! காரணம் பற்றி ஆய்வு!பத்திரிக்கை  செய்தி!
கடந்த மார்சு மாதமே நான் எழுதிய கவிதை இது பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ......!
மீள்பதிவுதான்! படித்துப் பாருங்கள்!

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே
மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே ஆடுவது அவரின் கட்சி- நாளும்
தவறாகப் பேசுவதே அதற்கே சாட்சி!


முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
முறையற்றுப் பேசுவதும் சாரமே யின்றி!
என்னவெனக் கேட்கின்றார் நல்லோர் தாமே-பிரதமர்
ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே கட்டுப்பாடு அணுவு மில்லை –யார்
காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
ஆள்வதற்குச் செய்வதவர் உரிய கடனே!
நடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, November 6, 2015

வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே!



வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று
வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே
உள்ளுவரேல் உண்மைகளை ஓர்ந்தும் நன்றே-என்றும்
உணர்ந்தாலே போதுமென வாழ்வீர் இன்றே
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டி'நல்  மறையே-உயர்
திருக்குறளே துணையென்றால் வாழ்வில்வரா குறையே
தள்ளுவனத் தள்ளி கொள்ளுவனக் கொள்வீர்-இதுவே
கொள்கையெனச் சொல்வீர் குறையின்றி வெல்வீர்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 4, 2015

சூதும் வாதுமே வாழ்வாகும் சொல்லில் இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!


பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...