Sunday, January 10, 2016

முகநூல் பதிவுகள்!





பாரதிதாசன் நடந்து போகும் வழியில் ஒரு குளம் தாமரைப் படர்ந்த , நீர் நிறைந்து காணப்பட்டது அது கண்ணைக் கவரவே அருகே சென்று கரையில்
நின்று , சலனமற்று தெளிந்த நீரை கவிஞர் எட்டிப் பார்தார் அவர் முகம் நீரில் தெரிந்தது! ஆகா கண்ணாடித் தரை என்றார்! உற்றுப் பார்த்தார் எங்கும் தாமரை இலைகள்! கண்கவர் பச்சை தட்டுகள்! என்றார் !மேலும் உற்றுப் பார்க்க , தாமரை இலைமீது முத்துப் போல் நீர் துளிகள் !எண்ணாத ஒளி முத்துகள் இறைத்தது போல என்றார்! கவிதை பிறந்தது!
கண்ணாடித் தரையின்மீது கண்கவர் பச்சைத் தட்டு! எண்ணாத ஒளி முத்துக்கள் இறைத்தது போல் குளத்தில்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்! என்ற வாக்கியம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் கேளீர்என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்
ஒன்று கேளீர் என்பது உறவினர் என்றும் மற்றொன்று கேளீர் என்பது சொல்வதைக் கேட்பீர்களாக என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார்கள்
நீங்கள் எது சரி என நினைக்கிறீர்கள்!!?

எந்தக் குடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அக் குடியில் பிறந்த மூத்தாவனாக இருந்தாலும் வயதில் இளையவனாக,இருந்து படித்து அறிவுள்ள ஒருவனையே ஊரும் மதிக்கும் , வரவேற்கும், போற்றும் என்பதுதான் உண்மை!

பையன் நல்லாப் படிக்கிறான் என்றால் பெற்றவர்கள் மகிழ்வார்கள் !பையன் நன்றாக. குடிக்கிறான் என்றால்!! மகிழவா செய்வார்கள்?

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 6, 2016

நாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை!


நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை

மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை

புலவர் சா இராமாநுசம்

Monday, January 4, 2016

முகநூல் பதிவுகள்





பெண்களுக்கென்று தனியாக மதுக்கடை திறக்கப் பட்டது இந்தியத் தலைநகர் டெல்லில்- செய்தி
காந்தியார் கண்டகனவு, சுதந்திரம் , பெண்ணுரிமை ஆகா!! மலர்ந்தது ! வாழ்க அகண்ட பாரதம்! பாரத மாதாவுக்கு ஜே ! பெண்ணடிமை ஒழிந்தது!

பொதுவாக சக்கரை என்பது இனிக்கும் என்றாலும் கூட அதிலேயும் வேறுபாடு உண்டு சில இனிப்பு குறைந்தும் சில இனிப்பக் கூடியும் இருக்குமல்லவா அதுபோல, வாழ்வில் நல்ல மனிதர்கள் என்று கருதப்படும் சிலரின் செயல் பாடுகளிலும் அவ்வப்போது சிறு சிறு வேறுபாடுகள் காணத்தான் செய்யும் அதையெல்லாம் பொருட் படுத்தக் கூடாது!

தனுஷ் பட கட்டவுட்டுக்கி 100 லிட்டர் பால் அபிஷேகம் -செய்தி! வெள்ளம் வந்த போது பாலுக்கு மக்கள் பட்ட அவதி!!!!!
கடவுளே! சினிமா மோகமும், மதுக்கடைகளும் உள்ளவரை இந்த நாடு உருப்படாது! அதில் துளியும் ஐயமில்லை!

பொதுவாக அனைவரும் பணத்தை சேமிக்க ஆசை படுவது இயல்பே! அப்படி சேர்த்த பணத்தை பாது காக்க , எந்த வங்கியில் போடலாம் ,அவ் வங்கி பாதுகாப்பானதா என்றும் யோசிப்பதும் இயல்பே! ஆனால் வள்ளுவன் சொல்லும் வங்கி எது வென்றால், பொருள் அற்றவனாக, தன்னை
அழிக்கின்ற கொடிய பசி நோயால் வாடுகின்றவன் வயிறே ,ஒருவன் பெற்ற பணத்தை வைக்கும் வங்கி என்பதாம் அதாவது ஏழையின் பசியைப் போக்குவதே
அற்றா ரழிபசி தீர்த லஃதெருவன்
பெற்றான் பொருள்வைப் புழி- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 31, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 29, 2015

நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்!



நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!


கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...