Saturday, November 14, 2015

என் முகநூல் பதிவுகள்!




உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது! குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர
வைத்தூறு போலக் கெடும்- குறள்

கரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும்! ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும்! நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்! அமைய வேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 10, 2015

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக!


பீகாரில் பா.ஜ. கா தோல்வி! காரணம் பற்றி ஆய்வு!பத்திரிக்கை  செய்தி!
கடந்த மார்சு மாதமே நான் எழுதிய கவிதை இது பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ......!
மீள்பதிவுதான்! படித்துப் பாருங்கள்!

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே
மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே ஆடுவது அவரின் கட்சி- நாளும்
தவறாகப் பேசுவதே அதற்கே சாட்சி!


முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
முறையற்றுப் பேசுவதும் சாரமே யின்றி!
என்னவெனக் கேட்கின்றார் நல்லோர் தாமே-பிரதமர்
ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே கட்டுப்பாடு அணுவு மில்லை –யார்
காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
ஆள்வதற்குச் செய்வதவர் உரிய கடனே!
நடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, November 6, 2015

வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே!



வள்ளுவரும் வகுத்தநெறி வழியில் சென்றே-முயன்று
வாழ்வார்க்கு வாராதாம் தீமை ஒன்றே
உள்ளுவரேல் உண்மைகளை ஓர்ந்தும் நன்றே-என்றும்
உணர்ந்தாலே போதுமென வாழ்வீர் இன்றே
தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டி'நல்  மறையே-உயர்
திருக்குறளே துணையென்றால் வாழ்வில்வரா குறையே
தள்ளுவனத் தள்ளி கொள்ளுவனக் கொள்வீர்-இதுவே
கொள்கையெனச் சொல்வீர் குறையின்றி வெல்வீர்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 4, 2015

சூதும் வாதுமே வாழ்வாகும் சொல்லில் இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!


பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!


நினைவு!

கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 29, 2015

வெண் மதியும் வீசும் தென்றலும்!


மதி!
விண்மீது தவழ்கின்ற வெண்மதியைப் பாராய்-இரு
விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!


தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

 
புலவர் சா இராமாநுசம்


Thursday, October 22, 2015

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும் தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்!



உயிரோடு எரிக்கப் பட்ட இளம் குழந்தைகள் கொடுமை! கவிதை! மீள்பதிவு!
கீழே (இன்றும் பொருந்தும்)

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும்
தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

 புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...