Sunday, July 3, 2011

உண்மையில் அரசாள தேவை ஆகும்

காட்டைத்  திருத்தி  நல்கழனி  ஆக்கி-தினம்
       காலையும்  மாலையும்  சென்று  வந்தோன்
வீட்டை  மகிழ்சியில்  ஆழ்த்தி  டவே-தை
       விரைகுது  பொங்கலோ  பொங்க  லடா
கூட்டாளி  மாட்டுக்கும்  பொங்க  லிட்டு-கை
       கும்பிட  வந்திடும்  தைத்  திருநாள்
பாட்டாளி  போற்றிடும்  மேதினம்  போல்-இந்த
       பாரெல்லாம்  கொண்டாடச்  செய்திடு  வோம்

வந்தது  வந்தது  பொங்க  லடா-உழவர்
       வாழ்வினில்  வறுமையே  தங்க  லடா
தந்தது  உணவன்றோ  உயிர்கள்  வாழ-நாம்
      தந்ததோ  அவரில்லம்  துயரம்  சூழ
வெந்தது  தானே  உள்ள  நிலை-அவர்
      வேதனை  நீக்குவார்  யாரும்  இலை
சிந்தனை  உடன்செய்ய  வேண்டு  மடா-எனில்
      செத்து  மடிவது  உறுதி  யடா                

உழுது  உழுது  அலுத்த  வனே-நாளும் 
      உதிரிப்  பூவாக  ஆகிவிட்  டான்
அழுது  அழுது  வடித்த  கண்ணீர்-நீர்
      ஆவி  ஆனது  வெம்மை  யிலே
தொழுது  வணங்க  வேண்டி  யவன்-கை
      துவளவும்  நாளை  மடங்கி  விடின்
பழுது  வந்திட உலக  மெங்கும்-அழி
     
பசியோடு  பஞ்சமே  என்றும் ஓங்கும்

அல்லும்  பகலுமே  பாடு  பட்டே-உழவன்
      அயராது  சேர்த்திட்ட  பொருளின்  விலை
சொல்லும்  நிலைமட்டும்  அவனுக்  குண்டா-என
       சொல்லுங்கள்  யாரேனும்  இன்று  வரை
கொல்லும்  பசிப்பிணி  மருத்  துவனே-அவன்   
       குமுறும்  உள்ளத்தை  அறிந்திடு  வீர்
ஒல்லும்  வழிதன்னை  காண்பது  தான்–உடன்
       உண்மையில்  அரசாள  தேவை  ஆகும்

14 comments :

  1. உழுது உழுது அலுத்த வனே-நாளும்
    உதிரிப் பூவாக ஆகிவிட் டான்
    அழுது அழுது வடித்த கண்ணீர்-நீர்
    ஆவி ஆனது வெம்மை யிலே
    தொழுது வணங்க வேண்டி யவன்-கை
    துவளவும் நாளை மடங்கி விடின்
    பழுது வந்திட உலக மெங்கும்-அழி
    பசியோடு பஞ்சமே என்றும் ஓங்கும்


    பல சமுக அரசியல் பொருளாதார விளக்கங்களை மறைமுகமாக சொல்லுகின்றன
    அச்சுப்போல அசல வரிகள் வருகின்றதே கவிதையில்
    உங்கள் கவிதையை வாசிக்க வாசிக்க தமிழ் செமையாகிறது எனக்கு
    --

    ReplyDelete
  2. வரிதோறும் வாசித்து கவியழக-நீர்
    வழங்கிடும் கருத்துக்கு மேலும்பழக
    உரியோனா நானல்ல அன்புத்தம்பி-என்
    உள்ளத்தில் வசிக்கின்ற நல்லத்தம்பி
    பெரியோனாம் வயதாலே மட்டும்தானே-எனில்
    பெரிதாக எண்ணாதீர் முற்றும்வீணே
    அரிதாக மேலும்பல ஆற்ற வேண்டும்-தமிழ்
    அன்னையவள் புகழ்தன்னை சாற்றவேண்டும்

    இராமாநுசம்

    ReplyDelete
  3. //அல்லும் பகலுமே பாடு பட்டே-உழவன்
    அயராது சேர்த்திட்ட பொருளின் விலை
    சொல்லும் நிலைமட்டும் அவனுக் குண்டா///

    சரள நடையில் சத்திய வார்த்தைகளை
    சரமாய்
    தமிழில்
    தொடுத்தவிதம்
    அமர்க்களம் அய்யா

    ReplyDelete
  4. ஒல்லும் வழிதன்னை காண்பது தான்–உடன்
    உண்மையில் அரசாள தேவை //

    அற்வினை ஓர்ந்து அருளிய அற்புத கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  5. பிரமித்து கருத்து சொல்ல
    வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் ஐயா ....ஒரு
    வார்த்தை விடாமல் படிக்கிறேன் ஐயா ...நன்றி
    சொல்லி என்றும் தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  6. http://tamilyaz.blogspot.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  7. உங்களிடம் குட்டு வாங்கினால் என் தமிழ் வளரும் இங்கே வருவீங்களா ஐயா

    http://tamilyaz.blogspot.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  8. சகோ, (விவசாயி நான் ஒரு விவசாயி)
    நான், விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மட்டு
    மல்ல விவசாயமே செய்து பார்தவன்
    குண்டூசி கூட விலை வைத்துதான்
    வெளியில் வருகிறது அந்த வரிகள் வேதனையின்
    வெளிப்பாடு சகோ வெளிப்பாடு
    தங்கள் கருத்துக்கு நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...

    சகோதரி அவர்களே
    உழவினார் கை மடங்கின்
    உலகே இல்லை என்பது வள்ளுவர் வாக்கு

    இராமாநுசம்

    ReplyDelete
  10. ரியாஸ் அஹமது said...

    தம்பீ
    குட்டக் கை உண்டு குனியும் தலை வேண்டா
    கட்டப் பொம்மன் போல் கம்பீர தலை வேண்டும்
    எட்டிக் காயான ஈன சிங்களரை தட்டி விரட்டும்வரை
    தன்மானம் ஒன்றேதான் தலை தூக்க வேண்டு
    மென்பேன்
    இராமாநுசம்

    ReplyDelete
  11. //ஒல்லும் வழிதன்னை காண்பது தான்–உடன்
    உண்மையில் அரசாள தேவை ஆகும்//
    சொல்லின் செல்வர் ஐயா தாங்கள்!

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...

    சொல்லின் வளம்மிக்கது தமிழ் ஐயா-அதை
    சொன்னால் தானே நான் தமிழ்ஐயா

    எரியும் விளக்கிற்கு தூண்டுகோலா
    தங்களைப்போன்ற உயர்ந்தவர்கள் துணை
    உள்ளவரை எண்ணை வற்றினாலும் ஒளி
    விடுவேன் நன்றி

    இராமாநுசம்

    ReplyDelete
  13. வணக்க ஐயா,

    தாமதமான வருகைகளுடன்....வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. விருத்தத்தில் விவசாயிகள், உழைப்பாளிகள் வாழ்வுதனை விருந்தாக்கி கவி படைத்துத் தந்ததோடு,

    இறுதி வரிகளில் அரசாள்வதற்கு அவசியமானது எது என்பதையும் நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

    அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...