ஆளும் அம்மா எண்ணுங்கள்-எதையும்
ஆய்ந்து பிறகே பண்ணுங்கள்
நாளும் செய்யும் மாற்றங்கள்-மிக
நன்றா என்பதை சாற்றுங்கள்
பாளு(ழு)ம் நூலகம் செய்திட்ட –பெரும்
பாபம் என்ன தூக்கிட்டீர்
தேளும் கொட்டிய நிலைபெற்றோம்
தீயில் விழுந்த நிலையுற்றோம்
வேண்டாம் அம்மா வேண்டாமே-மேலும்
வேதனை தன்னைத் தூண்டாமே
ஆண்டான் செய்தார் என்பதற்கா-அதை
அகற்றுதல் மக்கள் நன்மைக்கா
தூண்டா விளக்காம் நூலகமே-அதை
தூக்கி எறிதல் பாதகமே
ஈண்டார் என்னை எதிர்ப்பதென-வரும்
ஈகோ விடுவீர் வேண்டுகிறோம்
அதற்கென கட்டிய கட்டிடமே-அறிஞர்
அண்ணா பெயரில்! விட்டிடமே
எதற்கென மாற்றுமிவ் முடிவாகும்-இதனால்
என்ன நன்மை விடிவாகும்
இதற்கென எட்டு மாடிகளே-திட்டம்
இட்டே செய்தது பலகோடிகளே
குதர்கமே வேண்டாம் இச்செயலில்-புத்தக
குழந்தைகள் அழியுமிவ் புண்செயலில்
ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
உரிய வசதிகள் கிட்டியதே
ஒன்றை மாற்றி ஒன்றாக்கின்-அவை
அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்
நன்றா இச்செயல் ஆயுங்கள்-உடன்
நலமுற ஆணையை மாற்றுங்கள்
கன்றாம் மக்களின் தாயாக-உமைக்
கருதிட ஆவன செய்யுங்கள்
மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
மற்றோர் இடத்தில் கட்டுங்கள்
பொருத்தமே அனைத்தும் உரியதென-உலகு
போற்றிப் புகழ அரியதென
வருத்தமே யாரும் படமாட்டார்-உமை
வாழ்த்தியே துன்பப் படமாட்டார்
திருத்தமே செய்வீர் உடனடியே-முடிவை
திரும்பப் பெறுவீர் அப்படியே
குறிப்பு- மருத்தவர் ஆலோசனை, ஓய்வெடுக்க சொன்ன உங்கள் அன்பு
ஆணை இரண்டையும் மீறி இக் கவிதையை எழுத காரணம் வன்
செயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்! மன்னிக்க.
செயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்! மன்னிக்க.