Monday, March 30, 2015

இது , பலரும் படித்து அறிய வேண்டிய முக்கியச் செய்தி!


அன்பின் இனிய உறவுகளே
வணக்கம்
காவிரியில் கர்நாடகம் இன்று அணையைக் கட்ட முற்படும் இடம் எதுவென்பது பலருக்குத் தெரியவில்லை! கபினி அணை நிரம்பியபின் எஞ்சிய நீரும், கிருட்டினராச சாகர் நிரம்பியபின் எஞ்சிய நீரும் வெளியேறி அதன்பின் தடையின்றி மேட்டூர் அணைக்குத் தற்போது வந்து கொண்டிருக்கிறது . வெள்ளம் வந்தாலன்றி மேட்டூர்
நிரம்புவதில்லை! இந்நிலையில் கபினுக்கும் கிருட்டினராச சாகருக்கும் கீழே மேட்டூருக்கு மேலே இடையில் மேகதாது என்ற
இடத்தில் அணையைக் கட்டி இதுவரை வந்து கொண்டிருக்கும் எஞ்சிய நீரையும் தடுத்துவிட கர்நாடகம் முற்படுகிறது ! மத்திய அரசோ அமைதியாக இதனை வேடிக்கைப்
பாரர்ப்பதோடு இருமாநிலங்களையும் மோத விடுவது, இந்திய ஒருமைப் பாட்டிற்குக் கேடு ஃஎன்பதை அனைவரும் உணர வேண்டும்! பிறருக்கும் உணர்த்த வேண்டும்


புலவர்  சா   இராமாநுசம்

Saturday, March 28, 2015

முகநூலில் வந்தவை!





அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் அறுபது வயதைத் தாண்டினாலும் அவர் உள்ளம் இருபது வயது இளமையோடு தான்
இருக்கும்! ஐயமில்லை! ஆனால்...? இருவரில் ஒருவர் பிரிய நேர்ந்து
விட்டால்..!மற்றவர் வாழ்வு ? அதனால் விளையும், சோகம் ! சொல்லும் தரமல்ல!

உண்மையான காதலுக்குத் தான் எவ்வளவு ஆற்றல்!!!!!? காதல் முறிந்தால் அறிவும் அழிய பைத்தியமே பிடிக்கிறது! உடலும் கெடுகிறது!! உணர்வும் அற்றுப் போகிறது!இறுதியாக இறப்பு வரை செல்கிறது!

வெகு தொலைவில் தெரியும் புகையைக் கட்டி ,அங்கே ஏதோ நெருப்புப் பற்றிக் கொண்டது, என்று சொன்னால்,பார்த்தவர் யாரும்
நீ போய் நேரில் பார்த்தாயா ?என்று கேட்பதில்லை! அப்படிக் கேட்பவன் அறிவுள்ளவனாக இருக்க முடியாது ! நெருப்பு , பற்றினால்தானே புகை வரும் என்ற ,யூகித்து அறிய வேண்டிய , பொது அறிவுகூட இல்லாத அவனைப் போல் ,சிலரை , நாம், நம்
வாழ்கையில் எதிர் கொள்வது ,அதுவும் அவன் அரசியல் வாதியாக
இருந்து விட்டால்!!!? விளைவு ! சொல்லும் தரமல்ல!


தேனீ என்பது தேன் இருக்கும் இடம் எதுவோ ,அங்கே போய்தான்
உட்காரும் எனவே தான் அதனைத் தேனீ என்று சொல்வர்! ஆனால் , சாதரண சாக்கடை மலத்திலும் உட்காரும் இறைவனுக்கு வைக்கும் பிராசாதத்திலும் உட்காரும் இதுபோலத்தான் ,உலகில் நாம்
காணும் ,பழகும் மனிதர்களில் இருவகைப் பட்டவர் உள்ளனர் இதனை நாம்தான்  அறிந்து  நடந்து கொள்ள  வேண்டும்
 

புலவர் சா இராமாநுசம்

Friday, March 27, 2015

நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ் நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !



நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
   நாட்டினிலே  ஓரணியாய்  உணர்வும்  பொங்க !
அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும்
   ஆலைமுதல்  சாலைவரை ஆளே யின்றி!
முடங்கட்டும் முழுதாக போக்கு  வரத்து-மக்கள்
   முன்வந்து பயணத்தை  செய்ய இரத்து!
தொடங்கட்டும் அறப்போரே ! நமதே! வெற்றி
    தொடரட்டும் ஒற்றுமையே என்றும் பெற்றி!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 25, 2015

காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே!



காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க
கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே
பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை
வாய்விரிய பேசுகின்றார் மேடை ஏறி-ஆனால்
வரவில்லை ஓரணியில் உள்ளம் மாறி!
காயுண்டு கனிதன்னை எறிதல் உண்டா!-இனியும்
கட்சிகளே !உதிரிகளாய் காணல் தொண்டா

தன்முனைப்பு இல்லாமல் ஒன்று படுவீர் –ஏதும்
தடையின்றி பணிநிறுத்தம் வெல்ல விடுவீர்
துன்புறவே வாழ்கின்றான் உழவன் என்றும்-மேலும்
தொடர்ந்திடவே அணைகட்ட முயல இன்றும்
அன்பிலராம் கர்நாடகர் கேளாக் காதே-மத்திய
அரசுக்கும் இதனாலே வருமாம் தீதே
வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 23, 2015

வழுவாகும்! சட்டத்தைத் திரும்பப் பெறுவீர் –உழவர் வாழ்கின்ற வழிதன்னை விரும்பித் தருவீர்



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை!
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம்மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் எழுத்தாம்!
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கேஎடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்கே!
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியேஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலோ  ஒயவில்லைதினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரோ  காயவில்லை
உழுவார்க்கு  உழுநிலமும்  உரிமை  உண்டா –அதனை
உடைக்கின்ற  சட்டமது செய்தல்  தொண்டா
எழுவாரா ! தொழில்செய்ய   எண்ண வேண்டும்-அவர்
இல்லையெனில் மண்ணைத்தான்  உண்ண வேண்டும்
வழுவாகும்! சட்டத்தைத்  திரும்பப்  பெறுவீர் –உழவர்
வாழ்கின்ற வழிதன்னை விரும்பித்  தருவீர்

புலவர் சா இராமாநுசம்

Saturday, March 21, 2015

முகநூல் துளிர்கள்!





காதலிக்கும் இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய வேண்டும்! மணம் முடித்த பிறகு அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அறவே கூடாது! அறிவுக்கும் அதிக வாய்ப்பு,வழங்கல் ஆகாது! ஒரு கண்மூடித் தனமான வாழ்க்கையே அவர்கள் மேற் கொள்ள வேண்டும்! இன்றேல் இல்லறம் நல்லறமாக அமையாது!


மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு! ஒருவகையினர் இரத்தம் போன்ற, சித்தம் படைத்தவர்கள்! அவர்கள், அடி பட்ட இடத்திலிருந்து வரும் இரத்தம் போல தமக்கு வரும் துன்பத்திற்கு மட்டுமே வருந்துவார்கள்! இன்னொரு வகையினர், உடலில் எங்கு அடி பட்டாலும் வரும் கண்ணீர் போன்றவர்கள் இவர்கள் பிறருக்கு வரும் துன்பத்தைக் கண்டும் வருந்துவார்கள்!

கண்ணை மூடிக்கொண்டு நட என்றால் முயன்றுப் பார்க்கலாம்! அதோடு காலையும் கட்டி விட்டு ஓடு என்று சொன்னால்,அதற்கும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 18, 2015

சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில் சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்!


இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பன்
எழுதியது உண்மையென உணர நன்றே
அரக்கமனம் கொண்டீரா!? கைதும் செய்தீர் –விழி
அற்றவர்மேல் அடக்குமுறை அம்பை எய்தீர்
உரக்கபலர் ஆதரவுக் குரலைத் தந்தும் –ஏனோ
உணராது இருக்கயவர் உள்ளம் வெந்தும்
சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில்
சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்


விழியில்லை என்றாலும் படித்து விட்டே –ஏற்ற
வேலைதனை நாளும்பல கெஞ்சிக் கேட்டே
வழியின்றி வந்தாராம் வீதி தேடி-அவர்
வாழ்வதற்கு அறவழியில் போரும் ஆடி
பழியின்றி அதைத்தீர்க ஆளும் அரசே-உடன்
பரிவுடனே செய்வீராம் ஆள அரசே
கழியன்று கண்ணற்றோர் கையில் கோலே-வழி
காட்டுவது அதுவன்றோ ! தருவீர் வேலை

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...