Monday, September 12, 2016

அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


இனிமேலும் காவிரிநீர் வருமா மென்றே –நாம்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம் நன்றே
கனியேது காயின்றி அறிதல் இன்றே –சற்றும்
கனியாது கன்னடரின் உள்ளம் ஒன்றே
பணியாது நீதிக்கும் அறிந்து கொள்வோம் –காவிரி
பயிர்காக்க மாற்றுவழி கண்டால் வெல்வோம்
அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ
அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


புலவர் சா இராமாநுசம்

Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

Monday, August 29, 2016

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற எண்ணத்தால் வந்ததே கேடாம்!

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற
எண்ணத்தால் வந்ததே கேடாம்
வந்திடும் நீரெல்லாம் முற்றும்-நதியில்
வாராது தடுத்திட சற்றும்
சிந்தனை செய்வது சரியா-நாளும்
செயல்பட முனைவது முறையா
நிந்தனை செய்வதா எம்மை-நாங்கள்
நீரின்றி சாவதா செம்மை!?


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 24, 2016

எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!


எங்கே போகுது தமிழ்நாடு-மேலும்
இப்படி நடந்தால் பெருங்கேடு
இங்கே எதுவும் சரியில்லை-கேட்க
ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை
பங்கே பிரித்துக் கொண்டாராம்-நாளும்
பழங்கதை எடுத்து விண்டாராம்
சங்கே ஊதியே விடுவாரோ –இவர்
சண்டையில் மக்கள் கெடுவாரோ


புலவர் சா இராமாநுசம்

Sunday, August 21, 2016

முகநூல் பதிப்புகள்!



தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இல்லை என்றால் முற்றிலும் கெடும்
அமுதுகூட அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடுமென்பது தானே
ஆன்றோர் வாக்கு!

ஒலிம்பிக்கில் , வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற வீர மங்கையருக்குப் பலரும் வாழ்த்து தெரிவிப்பது பாராட்டுக்குரியது
ஆனால் அரசியல் வாதிகளும் சினிமா பிரபலங்களும் பாராட்டுவது
வியப்பாக உள்ளது! இவர்கள் தங்கள் செல்வாக்கினை விளையாட்டுத்
துறையை மேம்படுத்த இதுவரை, ஏதேனும் ஊக்கமோ, உதவியோ செய்தார்களா!!! இல்லையே! இதுவும் அவர்கள் தங்களை மேலும் விளம்பரப் படித்திக் கொள்ளும் ஒன்றோ என்றுதான் கருத த் தோன்றுகிறது!

பட்டறிவுக்கும் பகுத்தறிவுக்கும் வேறுபாடு உண்டு! ஒருமுறை விளக்கைத் தொட்டு சூடு பட்ட குழந்தை மறுமுறை தொடாது! இது
பட்டறிவு! நஞ்சுண்டவன் சாவான் என்றால், அவன் மட்டுமல்ல, நஞ்சு உண்டவள், நஞ்சு உண்டவர் நஞ்சு உண்டது என, அனைத்தும்
சாவுமென அறிவது பகுத்தறிவாகும்!

தமிழக சட்னமன்ற சபாநாயகருக்கு ஒரு வேண்டு கோள்!
மாண்பு மிகு ஐயா! எதிர் கட்சி உறுப்பினர் (88 பேர்) அனைவரையும் ஒரு வாரத்திற்கு, மன்ற நிகழ்சிகளில் கலந்து
கொள்ள தடை விதித் திருப்பது அறமோ, முறையோ அல்ல! அதனை
மறுபரிசிலீனை செய்து குறைத்து அவர்களும் தங்கள் சனநாயக்
கடமையை ஆற்ற ஆவன செய்வீர்கள் ,என நாடே எதிர் பார்க்கிறது! மாண்பு மிகு முதல்வர் அவர்களும் இதில் கவனம்
செலுத்த பணிவன்போடு வேண்டுகிறேன்!


உறவுகளே!
சமுதாயத்தில் ,நாம் பிறருக்காக அஞ்சி,தவறு செய்யாமல் வாழ்வதை, விட நம் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே நேர்மையான நடமுறையாக இருக்கும்! காரணம், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ
அல்லது, சமுதாயத்தில் மற்றவர்களுக்கோ அஞ்சினால் ,அவர்கள் காணாத வகையில் தவறு செய்யத் தோன்றலாம்! ஆனால் நாம், நம்
மனசாட்சிக்குப் அஞ்சினால் தவறே நடக்காது ஏனெனில் அதுதான்
நம்மோடு எப்பொழுதும் இருப்பதாகும்


மக்கள் ,நடுத் தெருவிலே நடக்காமல் நடை பாதையில் நடப்பது சட்டத்திற்கு மதிப் பளித்து , என்றால் பாராட்டுக்குரியது!
தெருவில் நடந்தால் வரும் வண்டிகள் மோதுமே என்று
அஞ்சிதான் என்றால், அது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி
இருக்க முடியும்! 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...