Wednesday, November 16, 2016

முகநூலில் முக்காலம்!


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்---வள்ளுவர் காலம்

டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டி பின்செல் பவர்------வெள்ளைககாரன்காலம்

இலஞ்சத்தில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பஞ்சத்தில் பின்செல் பவர்---இது, தற்காலம்

புலவர் சா இராமாநுசம்

Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும்
கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக
ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருவதைக்காணும் போது தமிழ்
நாட்டை தற்போது ஆள்வது பெரும்பான்மை அண்ணா திமுகா
அரசா?????? அல்லது !!!!!!வேறா ! ஐயம், எனக்கு வருகிறது
உங்களுக்கு!!!!??


உறவுகளே !
பொதுவாக மருத்துவ மனையில் , நோயாளி
சேர்க்கப் பட்டு குணமானால் மருத்துவர் தான்
அவர் வீடுதிரும்புவது(டிஸ்சார்சு)பற்றி அறிவிப்பார் ஆனால்
, நம் முதல்வர் வீடு திரும்புவதை அவர்தான் அறிவிப்பார்
என்று,அப்பல்லோ மருத்துமனை ,அதன் தலைவர் சொல்வது!!!!
சரியா?


ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாது என்று அரசு சொன்னதால் தங்கநகை
விற்பனைநேற்று இரவு முடிந்து விடிந்தும் நடந்து கொண்டிருகிறேதே நகைக் கடைகளில்
இப்படி கருப்பு பணம் வெள்ளை யாகிறதே அரசு என்ன செய்கிறது
செய்யப் போகிறது !!? முன் யோசனை வேண்டாமா!!


ஐயா ஓர் ஐயம்!
நோட்டுகள் செல்லாதென சொன்னது , சரி! வரவேற்போம்! பதிலாக வரும் புதிய நோட்டுகள், ஐநூறு
ஆயிரம் என்று வந்தால் தானே முறையாக இருக்கும் அது
என்ன இரண்டாயிரம் என்ற கணக்கு!!? இதில் ஏதேனும்
மர்மம் இருக்குமோ?


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பார்களே அவை என்ன! கீழே ----
மானம், குடிபிறப்பு ,கல்வி,ஈகை,அறிவுடமை,பதவி,தவம்,உயர்வு,
தொழில்முயற்சி, காதல் என்பனவாம்!


திருமிகு இராகுல் காந்தி அவர்கள்
வங்கியில் வரிசையில் நின்று செல்லாத நோட்டை மாற்றினார்
இது, செய்தி!
ஆகா! என்ன எளிமை! ஒரு பழமையான தேசியக் கட்சியின்
எதிர்காலத் தலைவர் மக்களோடு தானும் ஒருவராக நின்று ,(செலவிற்கு பணமில்லாமல்) நோட்டை மாற்றிக் கொண்டது
கண்டு நாடே பாராட்டுகிறது! இது ஒன்றே இவரது அரசியல் முதிர்ச்சிக்கு , எடுத்துக் காட்டு! இதற்கு மேலும் நான் விளக்க
வேண்டுமா! கடவுளே மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!


ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!


புலவர்  சா  இராமாநுசம்  

Sunday, November 6, 2016

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!


ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!



காவேரிக்காக அறவழி போராட்டம்!
-----------------------------------------------
உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும்
ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் –துயர்
போக்கிட ஒன்றென திரண்டு வாரீர்


மூத்தாரா இளையாரா பேதம் வேண்டாம் –தன்
முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட வேண்டாமா நமது உரிமை –இதைக்
கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று சொல்லி நம்மை -இனியும்
அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா எண்ணிப் பாரீர் –நம்மின்
எதிர்கால நிலையெண்ணி திரண்டு வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ –உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன் முடிவெ டுப்பீர் –எனில்
தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய்
இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

Friday, October 21, 2016

அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும் அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்



அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும்
அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்
உளமகிழ என்நன்றி மலரை ஏற்பீர்- பொங்கும்
உணர்வுகளை உரைத்திடவே இயலா! காப்பீர்!
வளம்திகழ வாழ்வாங்கு வாழும் வரையில்-ஐயன்
வள்ளுவனின் சொற்படியே முடிந்தவரையில்
நலம்திகழ நடந்திடுவேன் உறுதி! உறவே-மீண்டும்
நவில்கின்றேன் நன்றியென ! அறியேன் கறவே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 19, 2016

என் பிறந்தநாள் இன்று! வாழ்த்துங்கள் உறவுகளே!



உறவுகளே! வணக்கம்
இன்று என் பிறந்தநாள்! நேற்றோடு எண்பத்து மூன்று முடிந்து ,இன்று எண்பத்து நான்கு தொடங்குகிறது! வலைத்தள
நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்
தெய்வங்கள்! வாழ்த்துங்கள்! நான் வாழும் வரை உங்களை மறவேன்!
அன்பன், புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...