Friday, April 13, 2012

சித்திரைப் பெண்ணே


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Thursday, April 12, 2012

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!


எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
   இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
   பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
   கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
   பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
    கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
    இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
    சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
    கயவரைக் கண்டாலே விலகலினிது!


பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
     பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
     உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
    வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
     செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

                    புலவர் சா இராமாநுசம்





Tuesday, April 10, 2012

செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!



செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது
    சினமின்றி இருப்பாரைக் காணல் அரிது
பெய்யாமல் பெய்திட்ட மழையும் பெரிது
    பிழையின்றி நடப்பதும் மிகவும் அரிது

அறம்செய்து வாழுதல் என்றும் பெரிது
    அழுக்காறு அவாவின்றி இருத்தல் அரிது
புறங்கூறல் இல்லாத குணமே பெரிது
    பிறர்குற்றம் பேசாமல் இருத்தல் அரிது

குற்றமெனில் ஏற்கின்ற தன்மை பெரிது
    கொள்கையிலே மாறாத ஆட்சி அரிது
சுற்றமதை வெறுக்காமல் காத்தல் பெரிது
    சுயநலமே இல்லாதார் அரிது! அரிது

சட்டத்தை மதிக்கின்ற பண்பே பெரிது
    சமுதாய ஒற்றுமை காணல் அரிது
திட்டமிட்டு வாழுதல் என்றும் பெரிது
   தேவைக்கே உரியபொருள் தேடல் அரிது

நன்றல்ல செய்தாலும் பொறுத்தல் பெரிது
    நலமிக்க நல்லோரின் நட்பே அரிது
குன்றன்ன தடைவரினும் நேர்மை பெரிது
    கோடாத நீதிவழி நடப்போர் அரிது

வழியிலா வழிநீக்கி வாழல் பெரிது
   வையத்து வாழ்வாங்கு வாழ்வார் அரிது!
பழியிலார் ஆவதே பெரிது பெரிது
    பயிலாது கல்விவரல் அரிது! அரிது

                                       புலவர்  சா இராமாநுசம்

Monday, April 9, 2012

நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே!




நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே-நான்
       நினைக்கவில்லை!அடடா நம்புமென்றே
சாற்றுகின்ற பலபேரைக் கண்டதுண்டே-பல
      சந்தர்பம் வாழ்கையிலே வந்ததுண்டே
போற்றுகின்ற மனிதர்களை ஒருநாள்வந்தே-மனம்
      போனபடி குறைகளையே எடுத்துத்தந்தே
தூற்றுகின்ற நிலைதன்னைப் பார்ப்பதுண்டே-பெரும்
      துரோகியெனும் பட்டியலில் சேர்ப்பதுண்டே

நீதிக்கும் இடத்திற்கு ஏற்பமாறும்-என்ற
     நிலையுண்டு உலகத்தில்!மறுப்பார்!கூறும்
சாதிக்கி ஒருநீதி இங்கேஉண்டே!-வரும்
    சண்டைக்கும் சரிபாதி பங்கும்உண்டே!
போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?
ஆதிக்க மனப்பான்மை அழியவில்லை!-எனில்
     அதுவரைத் தீராது நமதுத்தொல்லை!

ஒன்றேதான் குலமென்று அண்ணாசொல்ல-மேலும்
    ஒருவனே தேவனென அவரேசொல்ல
என்றேதான் அந்நிலை தோன்றுமிங்கே?-எண்ணி
     ஏங்கியே வாழ்கின்றோம் வெற்றியெங்கே?
நன்றேதான் எதுவென்று அறிதல்வேண்டும்!-பல
    நல்லோரின் சொல்கொண்டு வாழயாண்டும்
அன்றேதான் நம்நாடு உயரும்உலகில்-ஏதும்
     ஐயமே அதிலில்லை! தீமைவிலகில்!

                            புலவர் சா இராமாநுசம்





Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!


அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை
   அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை!
வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை
   வளராது பயிரங்கே!துயரே! எல்லை!
களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!
உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை
    உணர்வின்றி நடப்பார்க்கும் அதுவே எல்லை!

பொய்சொல்லி வாழ்வதும் வாழ்வா இல்லை
    புறம்சொல்லி திரிவார்க்கும் வருமே எல்லை!
மெய்சொல்லி வரும்துன்பம் உண்மை யில்லை
    மேதினியில் அவர்வாழ்வே புகழின் எல்லை!
செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
     சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
     தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!


விதியென்ற சொல்லுக்கு வலிமை இல்லை
     வீணென்று புறந்தள்ளி நடப்பின் எல்லை
மதிவென்று வாழ்வுகுத் தாழ்வேஇல்லை
   மட்டற்ற மகிழ்வுக்கே காணார் எல்லை!
எதுவொன்றும் குறையின்றி ஆயின், இல்லை
     இனிதென்ற சொல்லுக்கு, வாழ்வில் எல்லை!
இதுவென்று சொல்பவர் யாரும் இல்லை
     இவ்வண்ணம் செயல்படின் உண்டோ எல்லை!

                    புலவர் சா இராமாநுசம்
   


Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!


கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே
   கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே!
பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே
    பெரியோரைத் துணையாகக் காணுதல் நன்றே!
உற்றவர் துயர்கண்டே நீக்குதல் நன்றே
    உண்மையை மறைக்காமல் உரைப்பதும் நன்றே!
அற்றவர் அழிபசி தீர்தலும் நன்றே
     அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

வழியலா வழிசென்று வாழ்வதும் தீதாம்
    வைதாரைப் பதிலுக்கு வைவதும் தீதாம்!
பழிவர எச்செயலும் செய்வதும் தீதாம்
    பாதகர் தம்முடன் பழகலும் தீதாம்!
இழிகுணம் ஒருவர்க்கு என்றென்றும் தீதாம்
    இல்லாரை எள்ளுதல் மிகமிகத் தீதாம்!
விழியெனக் கல்வியை அறியாமை தீதாம்
    வீண்காலம் போக்குதல் வாழ்வுக்கே தீதாம்!

எண்ணியே எச்செயலும் செய்திட வேண்டும்
     எண்ணாமல் ஆபத்தில் உதவிட வேண்டும்!
கண்ணியம் வார்த்தையில் என்றுமே வேண்டும்
    கடமையைத் தவறாது செய்திட வேண்டும்!
புண்ணியம் எதுவென்று அறிந்திட வேண்டும்
    புகழ்பெறப் பிறரைப் புகழ்ந்திட வேண்டும்!
பெண்ணினம் தன்னையே போற்றிட வேண்டும்
     பிறர்வாழ தான்வாழ நினைத்திட வேண்டும்!

                      புலவர் சா இராமாநுசம்



Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!
ஓதினான் அன்றே புலவன் நன்றே
கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே
மேதினி அறியதன் மேன்மையை சாற்றே!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!
சேதியை எடுத்தும் செப்பினான் அவனே!
நோதலும் தணிதலும் அதுபோல் என்றே
நுவன்றவன் அவனே! மேலும் நன்றே!


இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே!
செப்பிட முடியா இலக்கியப் பாடல்
எப்படி யேனும் படித்திட வேண்டும்!


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றே வகுத்தனர் இலக்கணம்!
பிழையென எதையும் தள்ளுதல் வேண்டா
விழைவன தவறெனில் கொள்ளுதல் வேண்டா!


உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
எள்ளும் நிலையே என்றும் வாரா!
தெள்ளிய தமிழில் திருமறை வடித்த
வள்ளுவன் வகுத்த வழிதனில் செல்வீர்!


ஏதிலார் குற்றம் கண்டது போதும்
வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
சோதனைப் பற்பல! மோதும் போதும்
சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!


இரவும் பகலுமாம் இன்பம் துன்பம்!
வரவும் போதலும் வழிவழி யாகும்!
உறவும் உணர்வும் ஒன்றிடவாழின்
துறவும் வேண்டா துன்பமும் தீண்டா!


நல்லன செய்தே நலமிக வாழும்
அல்லன நீக்கி அறமது சூழும்
வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!

                                   புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...