Friday, May 18, 2012

மே- பதினெட்டே!


              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
              தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே!
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக!
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்!

               உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
                   ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி!
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்!
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்!

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல!
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
                   குடும்பமே அழிந்த நாளன்றோ!?
               புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே!
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்!

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே!
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே!
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே!
              தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

                                                புலவர் சா இராமாநுசம்

Thursday, May 17, 2012

விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா வேரற்று வீழ்ந்திட விடுவீரா!



சென்றப் பதிவில் மாற்றமே
  செய்தேன் பாரும்! தோற்றமே!
என்றும் எழுதுவேன் விருத்தமே
  எழுதினேன் வெண்பா திருத்தமே!

பலரும் அதனை அறியவில்லை
   பதிலில்! ஏனோ? தெரியவில்லை!
சிலரில் ஒருவரே வெண்பாவே
   செப்பினார்! அருணா ஒண்பாவே!

மாற்றம் வேண்டி மாற்றியதே
  மனமே வெண்பா சாற்றியதே!
ஏற்பதோ உங்கள் கையில்தான்
  எழுதுவேன் மேலும் பொய்யில்தான்!

முன்பே சிலபேர் கேட்டார்கள்
   மொழிந்திட வெண்பா பாட்டாக!
அன்பரே பிடித்தால் கொள்ளுங்கள்
    அல்லது என்றால் தள்ளுங்கள்!

செப்பிடின் வெண்பா எளிதல்ல
   செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
   ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!

எழுதுவேன் மேலும் சிலவற்றை
   என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
   வேரற்று வீழ்ந்திட விடுவீரா!

             புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 15, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!


எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

Saturday, May 12, 2012

அன்னையர் தினம்!



சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 11, 2012

பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும் பாரா முகமேன் ஆள்வோரே!


தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
   தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
   எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி 
    அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
   பாரா முகமேன் ஆள்வோரே!


கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
    கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
    விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
   தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
   கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!


சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
   செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
    தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
   எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
   கட்டணம் எரியும் கொள்ளிகளே!

                          புலவர் சா இராமாநுசம்
  

  

Thursday, May 10, 2012

தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!


தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
   தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
    வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
    நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
    வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!

இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
   ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
   தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
   எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
   சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!

கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
    அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
    பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
   ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!

                  புலவர் சா இராமாநுசம்


Monday, May 7, 2012

என்னவள் மறைந்ததும் இந்நாளே


ஓடின மூன்று ஆண்டுகளே-என்
  உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
   தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
   வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
   படைத்தேன் படித்திட நீரிங்கே!

தன்னலம் காணாத் தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்!
 இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்!
 என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்!
 அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

                       புலவர் சா இராமாநுசம் 


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...