Monday, February 1, 2016

முகநூல் பதிவுகள்!


பொதுவாக திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம்! காரணம் அது எல்லாநாட்டுகும் எல்லா மதங்கள், சமயங்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை கொண்டிருப்பதே ஆகும் என்பர் !ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களின் கருத்துகள் சில இக்காலத்திற்கும் சில நாடுகளுக்கும் பொருந்தாது எனவும் ஒரு சிலர் சொல்கிறார்களே! உங்கள் கருத்தென்ன!!!?

சாதரணமாய் மனித மனம் நடந்த பிழையை தான் ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மேல் சாற்றுவது நடை முறையாக உள்ளது! உதாரணமாக , ஒருவன் படி இடித்தது வலிக்கிறது என்கிறான்! ஆனால் ,உண்மையில் படிவந்தா இவனை இடித்தது! இல்லையே! இவனே , கவனிக்காமல் படியில் இடத்துக் கொண்டு, படி இடித்தது என்கிறான்! இதுபோலத்தான் வாழ்வில், சில நிகழ்வுகள்! நடக்கின்றன! ஆனால் யாரும் எண்ணிப் பார்பதில்லை!

காலமாற்றத்தால் கருத்துகளும் பழக்க வழக்களும் மாறத்தான் செய்யும் என்பது உண்மைதான்! அவை ,முதலில் கசந்தாலும் படிப்படியா நடைமுறையாக பழகித்தான் போகின்றன! முன்பெல்லாம் கணவன் பெயரைச்
சொல்லவே மனைவிமார் விரும்ப மாட்டார்கள்! ஆனால்!? இன்று! அப்படியா! தன் கணவன் பெயரைச் சொல்லி அழைப்பதையும் தாண்டி , வாடா, போடா ,என பேசிக் கொள்வதை பல குடும்பங்களில் பார்கிறோம்! அதுமட்டுமா இந்நிலை சினிமாவிலும் சீரியலிலும் சர்வ சாதரணமாகிட்டது ! வயதான என்னைப் போன்றவர் வருந்தினாலும் பயன் இல்லையே!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, January 28, 2016

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

புலவர் சா இராமாநுசம்

Monday, January 25, 2016

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே


காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

Thursday, January 21, 2016

வலையுலக உறவுகளுக்கு அறிவிப்பு!


உறவுகளே வணக்கம் சில நாட்களாக கண்ணில் கோளாறு அதனால் ,வலை வழி வரவோ படிக்கவோ  மறு மொழி தரவோ இயலவில்லை மருத்துவ சிகிச்சை! நடக்கிறது இன்னும் சிலநாட்கள் ஆகலாம்! மன்னிக்க!

          புலவர்  சா  இராமாநுசம்

Saturday, January 16, 2016

திருவள்ளுவர் திருநாள் !


திருவள்ளுவர் திருநாள் !

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்


சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

Friday, January 15, 2016

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்!


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்


காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
விளைந்திட அறுவடைப் பொங்க லிட்டான்
மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
மனித நேயத்துக்கே வித்தி டுவான்
பாட்டுக்கே அன்னவன் உரிய வனாம்-தமிழ்ப்
பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!

உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
கைகள் முடங்கிடின் எதுவு மின்றே
மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
இயலாது! இயலாது !கண்டோ மன்றே-அந்த
ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

புலவர் சா இராமாநுசம்

 வணக்கம் ! அனைவருக்கும்  இனிய  பொங்கல் வாழ்துகள்!

Thursday, January 14, 2016

நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன நாடகம் இதுவோ தெரியவில்லை!



நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன
நாடகம் இதுவோ தெரியவில்லை
கடக்கும் நாளே இன்னும் ஒன்றாம்-பின்பே
கபடம் வெளிப்படும் நன்றாம்

தேர்தல் வந்தால் தெரியும் தானே!-எதற்கு
தேடல் விடையும் வீணே
பார்தனில் அடடா பதவிப் பெறவே-கட்சிகள்
படுவதும் சொல்வதா அறவே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...