Friday, April 15, 2016

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!


கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!


வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலர்தனில் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 14, 2016

சித்திரைத் திருநாள் வாழ்த்து


இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு )

Monday, April 11, 2016

முகநூல் பதிவுகள்!





உறவுகளே!
வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன்! ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல
மிகவும் கேவலமான நிலையினை இதுவரை கண்டதில்லை!இங்கு நாளும் நடை பெற்ற கூட்டணி கூத்துகளும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கு, ஒன்று சளைத்தல்ல என்பது போல அலைந்த அவலமும்,
மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுவதோடு சீட்டுப் பங்கீடும், அனைவருக்கும் பதவி ஆசை! என்பதை விட பதவிவெறியும்
  பிடித்து ஆட்டுகிறது என்பதே உண்மை!
எதிர்காலத் தமிழகம் என்ன ஆகுமோ !!!?




உறவுகளே ஓர் ஐயம்!
இதுவரை எல்லா அரசியல் கட்சிகளும் இலவசம் கொடுப்பது கூடாது அவ்வாறு கொடுப்பது மக்களைக் கெடுப்பது என்றும் இன்று
பேசுவது பெரும்பான்மை ஆகிவிட்டது! ஆனால் ஒவ்வொரு குடிசை வீட்டிற்கும் ஒரு மின் விளக்கே அனுமதித்துள்ள அரசு தொலைகாட்சி பெட்டி ,கிரைண்டர், மிக்ஸி என பலமின் இணைப்புகளை வைத்துக் கொள்ள அனுமதித்து எப்படி ( மீட்டர் ) இல்லாமல் என்று யாரும் கேட்க வில்லையே !என்பதுதான் என்னுடைய ஐயம்! யாரும் அப்படி கேட்கமாட்டார்கள்! அப்டிக் கேட்கும் கட்சிக்கு குடிசை வாசிகளின் ஓட்டு வருமா!!!?


நினைக்கத் தனக்கு என்பார்கள்! அதன் பொருள் என்ன! ஒருவன் தன் உள்ளத்தில், அடுத்தவன் கெட வேண்டுமென நினைத்தால் அது அவனுக்கே வந்து சேரும்! அடுத்தவனும் வாழட்டும் என்று நினைத்தால் இவ்வனும் வாழ்வான்! என்பதாம்! இதையேதான் வள்ளுவரும் , உள்ளுவ(து) எல்லாம் உயர்வுள்ளல் என்றார்

உறவுகளே!
வணக்கம்!
அனைவரும் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையே! அதற்காக நாம் பெரிதாகச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! முதலில் நாம் அனைவரையும் மதித்து நடந்தாலே போதும் !பிறகு , பாருங்கள்!பிறர் நம்மை மதிப்பது
உங்களுக்கே தெரியும்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 28, 2016

முகநூல் பதிவுகள்




ஊழலை ஒழிக்க முடியுமா !? முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை! கிணற்று நீரில் நஞ்சு கலந்து விட்டால் அதில் உள்ள நீரை அகற்றி விட்டால் போதும்! ஆனால் கிணற்றில் சுரக்கும் நீரே நஞ்சானால் என்ன செய்வது !? அதுபோலத்தான் இன்றைய நம் சமுதாயமும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் ஆனதோடு மக்களின் மனநிலையும் ,சுய நலத்தால் பிறர் செய்தால் ஊழல் அது தான் செய்தால் அல்ல என்று நினைக்கின்ற போக்காக மாறிவிட்ட தென்றால்!!! ஊழலை ஒழிக்க முடியுமா???? பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!


நெருஞ்சி முள் படர்ந்த தரையில் காலை வைந்தால் பாதம் முழுதும் முள் குத்ததானே செய்யும் !காலை மாற்றி மாற்றி , அங்கேயே வைத்தாலும் மீண்டும் அதே நிலைதானே!அதிலிருந்து விடுபட அவ்விடம் விட்டு வெளியே வருவது தானே புத்திசாலித் தனம்! அதுபோல நாம் வாழ்கையிலும் சில நிகழ்வுகள் வரும் ! அதுபோது அச் சூழ்நிலையில் இருந்து விலகி வருவதுதான், நமக்கு, நன்மை தரும்


உறவுகளே! வணக்கம்!
சொற்களைக் குறைவாக சொல்லி பொருளை விளங்க வைத்தலே செய்யுளுக்கு அழகு !அதுவாக இருக்க ஔவையார் ஏன் அறம்செய் ,என்று சொல்லாமல்,அறம் செய விரும்பு என்று சொல்ல வேண்டும் என்ற ஐயம் எழலாம் ! அறம் செய் என்பது ஏதோ கட்டளை இடுவது போல இருக்கும்! மேலும் ஏதோ சொன்னார்களே என்பதற்காக கட்டுப்பட்டு செய்வதாக அமையும் !தொடருமா என்பது ஐயமே! ஆனால் , அறம் செய அவனே விரும்புவதாக ஆகி விட்டால் அப் பணி தொடருமல்லவா! இதனை உணர்ந்தே அவ்வாறு மனோ தத்துவ அடிப்படையில் அன்படிக் கூறினார்


செய்தி!!!? ஒரு.....
மாணவன் பொதுத் தேர்வு எழுதிய முடித்த பின், வினாத்தாளைக் கொடுத்துவிட்டு ,விடைத்தாளை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டதாகவும் பிறகு விடைதாளை சரிபார்க்கும் போது, அடையாளம் கண்டு பிடித்து மாணவன் இல்லத்துக்கே சென்று வாங்கி வந்த தாகவும் வந்துள்ளது!! இது எவ்வளவு பெரிய அவக்கேடு!?
யாரை நோவது ? இன்றைய கல்வியின் தரத்தையா! மாணவன்
தரத்தையா ,மேற்பார்வை பார்த்தவரின் கவனக்குறையை யா? வெட்கப்படுகிறேன்! நானும் ஆசிரியனாக பணியாற்றிய காரணத்தால்

புலவர்  சா  இராமாநுசம்





இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...