Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

Sunday, October 2, 2016

அண்ணல் காந்திக்கு அஞ்சலி!


அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!


புலவர் சா இராமாநுசம்

Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!




இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!

ஏழுமலை வேங்கடேசா கோவிந்தா-போற்றி
எழுதுகின்றேன் பெருமாளே பாவிந்த
வாழும்வரை நான்மறவேன் கோவிந்தா-நான்
வாழ்வதெல்லாம் உம்மாலே பாவிந்தா
பாழுமனம் மட்டுமேனோ கோவிந்தா- நாளும்
பரிதவிக்க விடுவதேனோ! பாவிந்தா
சூழுமலை எங்கனமே கோவிந்தா –மக்கள்
சுற்றிவர ஒலிப்பதொன்றே கோவிந்தா!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 21, 2016

முகநூல் பதிவுகள்!


ஆற்றின் நீர் வற்றி நடப்பவர் பாதங்களை சுடுகிள்ற அளவுக்கு
வெயில் காய்ந்தாலும் மணலை தோண்டினால் நீர் சுரக்கும் என்பது
தற்போது பொருந்தாது! காரணம்? ஆற்றில் மணல் இருந்தால் தானே!
அதைத்தான் அரசியல் வாதிகளும் மணற் கொள்ளையரும் முற்றிலும்
சுரண்டி எடுத்து விட்டார்களே!

கொத்துக் கொத்தாக மலர்ந்தாலும் மணமில்லா த மலரைப்போல,
எவ்வளவுதான் நூல்களைக் கற்றிருந்தாலும், அதனைப் பிறருக்கு
எடுத்துச் சொல்ல இயலதவன், கற்றவனாக , கருதப்பட மாட்டான்!
என்பதாம்!

உறவுகளே
மிகச் சிறிய கூழங்கல்லானாலும் தண்ணீரில் விழுந்தால்
நேராக தரைக்கு சென்று அமையாகி விடுகிறது! ஆனால், எவ்வளவு
பெரிய தக்கையானாலும் மேலும், மேலும் நீர் வந்தாலும் மிதக்கவே
செய்கிறது! அதுபோல, நம்,நம்முடைய வாழ்க்கையில், இன்பம் வரும்போது ,கல்லாக ,அமதியாக அடக்கத்தோடு மகிழ்ந்தும்,துன்பம் வரும்போது துடிதுப் போகாமல் மூழ்காத தக்கைபோல தாங்கிக்
கொண்டும் வாழப் பழக வேண்டும்!


சமீபத்தில் ஒரு பதிவினைப் படித்தேன்!
வானம் பெய்து மழை நீர் வெள்ளமாக ஓடி கடலில் கலக்கா
விட்டால் பெரிய கடலும் தன்னுடைய வளத்தை இழந்து விடுமாம்!
என சொல்வதாக! இதைத்தான் வள்ளுவர் பெருமானும் வான் சிறப்பு அதிகாரத்தில் வெகு அழகா
நெடுங் கடலும் தன் தன்னுடைய நீர்மைகுன்றும் என்பதை அன்றே சொன்னார்! நம் முன்னோர் அறிவியலை எவ்வளவுதூரம் அறிதுள்ளார் !என்பது மிகவும் வியக்க தக்கதல்லா!


அளவுக்கு மீறிய சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளின் ஆசையே
ஊழலுக்கு காரணமாகும் !ஊழல் குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்யப் பாட்டலே போதும் ,அவர்கள் நிரந்தரமாக.அதன் பின்
வாழ்நாள் முழுதும் ,தேர்தலில் நிற்க முடியாது என நிரந்தர தடை
ஏற்பட்டாலே ,அதன் மூலம் பயம் வந்து பெருமளவு ஊழல்
குறைந்து நேர்மையான அரசியல் வாதிகள் பொது வாழ்வுக்கு
வருவார்கள்! செய்வார்களா?


நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்க முடியாது! நீர் பட்டாலே நெருப்பு
அணைந்து விடும்!ஆனால் நீரால் உருவாகி, நீரை தன்னகத்தே கொண்டுள்ள மேகம் மழையைப் பெய்ய முனையும் போது ஒன்றுடன் , ஒன்று மோத , தோன்றும் மின்னலும் இடியும் நெருப்புதானே! இது, விந்தையாக உள்ளது அல்லவா!


உறவுகளே!
இன்றைய சமுதாயத்தில் நாம் எப்படி வாழ்ந்தால் தக்குப்
பிடிக்க முடியும்! எண்ணிப் பார்த்தால்,தண்ணீரில் வாழும் மீனாக
இருந்தால் ,இயலாது! தரையில் விழுந்தால் வாழ்வு முடிந்து விடும்!
எனவே, தண்ணீரிலும் வாழ்ந்து தரையிலும் வாழுகின்ற தவளையை
போல ,நம்மை, நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்! அப்படி இருந்தால்
தான் ஒரளவாவது நாம் அமைதியாக வாழ முடியும்!


புலவர்  சா  இராமாநுசம்   

Saturday, September 17, 2016

இரங்கல் கவிதை!



கொள்ளிவைக்கப் பெற்றார்கள்! மகனே உன்னை-ஆனால்
கொள்ளிவைத்து கொண்டாயே நீயே தன்னை
அள்ளியுனை மார்பணைத்துப் பாலும் தந்த-இங்கே
அன்னையவள் வற்றாத கண்ணீ சிந்த
துள்ளுகின்ற வயதுனக்கே! துடிக்கும் தந்தை-உற்றார்
தோழரேன பல்லோரும் வெடிக்க சிந்தை
சொல்லுகின்ற ஒன்றல்ல விக்னேஷ்! துயரம்-உண்மை!
சொல்லியினி பயனில்லை திரும்பா உயிரும்!


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 15, 2016

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம் இணைந்தால் போதும் நன்றாக!


இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவரும் ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! நடத்திடின் உய்விரே!


வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 13, 2016

பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்!


மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
ஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் ?
இமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்
தேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்
உரிய நேரம் ! தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி !பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை
சட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை! உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும்! சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்
குழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது! மீண்டும் பணிவோடும் ,கனிவோடும்
வேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன்  நதி அனைத்தையும்  இணைக்க,

பகுதி பகுயாக இணைக்க உரிய  திட்டங்களை  வகுத்து   போர்க்கால  நடவடிக்கையாக  என்ன செய்ய வேண்டுமோ அதையும்  செய்வது  உங்கள்   முக்கி  கடமையாகும்  சிந்தியுங்கள்!
செயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர்  பொன்  எழுத்தாக  பொலிவு  பெறும்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...