Friday, December 30, 2016

முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!




படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, December 25, 2016

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்

ஏசுவே மீண்டும் வாரும்
இங்குள்ள நிலையைப் பாரும்
பேசுவ அனைத்தும் பொய்யே
பிழைப்பென! காண்பீர் மெய்யே!
கூசுவ அரசியல் போக்கே!
குறைகண்டே விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க வாரும்!
துயர்போக எம்மைக் காரும்!

கருணையின் வடிவம் நீயாய்
காப்பதில் அன்புப் தாயாய்

பெருமையும் பெற்றவர் ஆக,
பேசுதல் நிலையாய்ப் போக!
உருவமே பெற்று வருவீர்
உலகினைக் காத்தே அருள்வீர்!
தருணமே இதுதான்! ஆகும்!
தவறிடின் ! அழிந்து போகும்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 11, 2016

வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி



நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு
-----------------------------------------------------
வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே
வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி
திரண்டிட குடத்தோடு தெருவில் எங்கும்=மக்கள்
திரிகின்ற நிலைவருமா இங்கும் அங்கும்
உருண்டன! மழைக்காலம் போகும் முன்னே- அரசு
உருப்படியாய் திட்டமிடல் நன்றாம்! பின்னே
மருண்டிடும் மானாக திண்டாடிப் போவீர்-உடனே
மறவாது செயல்பட்டு மக்களைக் காவீர்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 7, 2016

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!


மக்கள் படும் பாடு
--------------------------
முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே!
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே!
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்நீரைத் துடைப்பிரா மத்திய அரசே!
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே!


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே!
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே!
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே !
வயிர்மட்டும் எதற்காக? மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 4, 2016

வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!


வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும்
வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!
சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச்
சிந்தனையாம் ஒன்றே நிலையாய் நின்றே!
பாராள வந்தோரின் பாரா முகமே- வானம்
பார்கின்ற விவசாயி காண, அகமே!
கூரான வேல்கொண்டு குத்தல் போல-உள்ளம்
குமிறியழும் நிலைதன்னை காண்போம் சால!


புலவர் சா இராமாநுசம்

Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!




அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????  பொருந்தும்

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!



சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 22, 2016

தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!



கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில்
கார்மேகம் காணலியே நாராயணா
நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில்
நீர்வடிந்து வற்றிவிட நாராயணா
வார்த்தையில்லை செல்வதற்கு நாராயணா-வாழ
வழியேது உழவனுக்கு நாராயணா
தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன்
திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...