Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்


ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!


கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!



அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை
அரசியல் மாற்ற காட்சி!
வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி
வெள்ளமாய் அடிக்க எண்ணீர்!
ஒழிந்தது ஆணவக் ஆட்சி –இன்று
உலகமே போற்றும் மாட்சி!
கழிந்தநாள் மறப்ப தல்ல-அவை
கனவென நினைத்துத் தள்ள!


வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
வந்திட நெஞ்சில் ஒன்றே!
பெருமாட்சி செய்யத் தானே-சற்று
பெருமூச்சு எழவும் வீணே!
தருமாட்சி நன்றாய் காண –ஈழத்
தமிழரும் உரிமை பூண!
திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை
திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!


அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த
ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்!
எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி
எழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே!

கோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்
கும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-!
நோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல
நோக்கமில்லார்! இவருக்கு இல்லை நிகரே!

தேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி
தேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்!
நாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று
நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, January 4, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக !



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
நிலையாக தடையின்றிப் பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைவது உண்டே
செயற்கையால் வருவதே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – வந்து
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

Friday, January 2, 2015

முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்!


முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்-நாளும்
முன்னேற மக்களவர் முயற்சி, செந்தேன்!
தன்பணி என்னவென அறிந்துக் கொண்டே- அவர்
தவறின்றி உழைக்கின்ற அழகுக் கண்டே!
என்பணி விரிவாக எழுத வேண்டும்- ஆனால்
இயலாமை! முதுமை !முடக்க ஈண்டும்!
பின்பதனை முடிந்தவரை எழுது கின்றேன் –சிலநாள்
பொறுத்திடுவீர்! உறவுகளே தொழுது நின்றேன்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள்! அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு
தொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
புலவர் சா இராமாநுசம்

Monday, December 22, 2014

என் முகநூல் பதிவுகள்!




ஒரு துறவியைப் பார்க்க,தந்தையோ, மற்ற உறவினரோ எவர் வந்தாலும் , அவர்கள் தான் முதலில் துறவியை வணங்க வேண்டும் அதன்பின்னர் துறவி வணங்கலாம் . வந்தது தாய் என்றால் துறவிதான் முதலில் வணங்கியாக வேண்டும் இது நியதி!

 தமிழன் எவருக்கும் தாழ்ந்தவன் அல்ல
தமிழன் எவரையும் தாழ்த்துபவனல்ல
அடங்கத் தெரிந்தவன் தமிழன்
அடக்கவும் தெரிந்தவன் தமிழன்
அன்புக்கே அடிபணிவான் தமிழன்
அதிகாரத்திற்குக் கட்டுப்பட மாட்டான்

காவல் தானே பாவையர்க்கு அழகு
பெண்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு அழகாகும்.
கீழோர் ஆயினும் தாழ உரை
தன்னைவிடத் தாழ்ந்தவராயினும் அவர்களிடம் அடக்கமாகப் பேசு

வாழ்க்கையில் ஒருவனைப் பற்றி முழுதும் அறியாத நிலையில், அவனிடம் நம்பிக்கை வைப்பதும் தவறு! அதேபோல ஒருவனை முழுதும் ஆய்ந்து தெளிந்த பின்னர் அவனைப் பற்றி சந்தேகப்படுவதும் தவறு ! இவை, இரண்டு குணங்களும் நம்மிடை இருக்குமானால் என்றும் தீர்க்க இயலா துன்பமே தரும்!

நேற்று என்பது! இறந்தகாலம் நடந்த நிகழ்வுகள் நல்லதோ , கெட்டதோ நினைவில் கொள்வோம்! இன்று என்பது நிகழ்காலம் செய்வன எண்ணிச் செயல் படுத்துவோம்! நாளை என்பது எதிர்காலம்!
நேற்றும் இன்றும் செய்ததை எண்ணி திட்டமிடுவோம்! இவை வாழ்கையில் வெற்றிபெற வழிவகுக்கும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...