Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!




ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!

தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?


ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!

                                            புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!




       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!





ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு! 
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல 
பண்பை என்றும் நீநாடு! 
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் 
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு 
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற 
கொள்கையைக் காக்க தயங்காதே! 

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு 
எண்ணி எதையும் செய்வாயே! 
செயற்கையைத் தேடி அலையாதே-நம் 
செந்தமிழ் பேச மறக்காதே! 
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ 
முயன்றால் வெற்றி அவ்வினையாம் 
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே 
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே! 

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது 
உரிமைக்கு வந்தால் போராடு! 
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர் 
ஏய்க வந்தால் நீசாடு 
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில் 
என்றும் வாரா ஒருகேடு 
செவ்வழி இவையே நலங்காண-பிறர் 
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
   

Thursday, January 17, 2013

அணிந்துரை.! கவியாழி கண்ணதாசனின் நூலுக்கு!


                                 அருமை  நண்பர்  கவியாழி கண்ணதாசனின்
அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும்  தருவாயா  என்ற  நூலுக்கு
 நான்  எழுதிய   அணிந்துரை.






புலவர் சா இராமாநுசம்  
புலவர் குரல் வலைப்பதிவு
மதிப்பியல் தலைவர்
தமிழகத் தமிழாரிரியர் கழகம்


              இக்கவிதை  நூலின் ஆசிரியர், என இனிய நண்பர்  கவியாழி கண்ணதாசன் அவர்கள் கவிதைகள் எழுதுவதில் காட்டுகின்ற ஆர்வம்
என்னை மிகவும் வியப்படையச் செய்யும்

          இன்றைய வலையுலகில் ,  மிக மிக குறுகியகாலத்தில், தன்
பெயரிலேயே , ஒரு வலைப்பதிவினைத் தொடங்கி, இவ்வாறு நூல்
வெளியிடும்  அளவிற்கு பல கவிதைகளைப் படைத்த ஆற்றலைக்
கண்டு நான் மெத்தவும் மகிழ்வதோடு பெரிதும் பாராட்டவும் கடமைப்
பட்டுள்ளேன்.

           மரபுக் கவிதைள்  எழுதுவது கடினம் என்ற நிலையில் இன்று
புதுக்கவிதைகள்  எழுதுவோர் எண்ணிக்கையில்  அதிகரித்து விட்டனர்
என்பது மறுக்க இயலாத உண்மை. அவ்வரிசையிலே ஒருவர்தான் நண்பர்
கண்ணதாசன். இவரது  ஆர்வமும், ஆற்றலும் மேலும், மேலும் வளரும்
என்பதிலே எனக்கு ஏதும் ஐயமில்லை

          எனவே அவர் எழுதியுள்ள கவிதைகளில், சில இடங்களில்
உள்ள, சில வரிகளை இங்கே, சுட்டிக் காட்ட  விரும்புகிறேன்.

        சாதி(தீ) என்ற கவிதையில் அவர் சாதி மத பேதங்களை
மிகவும் சாடியதோடு

        மனிதத்தைப் போற்றினால்
        மதமென்ன தடையாசொல்லும்  
என்று கேட்கும் கேள்வி அனைவரும்    சிந்திக்கத் தக்கது

        தமிழை மணந்து  என்ற  தலைப்பில அவர் எழுதியுள்ள
கவிதையில் காணப்படும் அவரது தன்னடக்கப் பண்பும், தன் கவிதைகளைப்
படித்து, மறுமொழி இடும் வலையுலக உறவுகள்பால் அவர் கொண்டுள்ள
பற்றும் பாசமும் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

        சமுதாய தொண்டு என்ற நோக்கோடு பல கவிதைகள்  எழுதியுள்ளார்
அவற்றில் குறிப்பிட தக்கன....
      
        உடல் தானம் செய்வீர், கல்வி (காசுபார்போரின்)கடவுள், ஆயுத பூசை
மகிழ்ச்சியா நிகழ்ச்சியா, போன்ற கவிதைகளைப் படித்து சுவைக்கலாம்
         மேலும், காதல் சுவை சொட்ட  இவர் எழுதியுள்ள கவிதைகள், நூலில் பலவற்றை  நீங்கள் படித்து  மகிழலாம் 

        சுருக்கமாகச் சொன்னால்,  இவர் தன்னுடைய பெயரைக் கண்ணதாசன் என்பதை விட கவிதை தாசன்  என்று வைத்துக் கொண்டால்
கூட  பொருத்தமானதே என்பது என்கருத்து
       
       முடிவாக இவரது ஆற்றல் வளரவும்  ஆர்வம் பெருகவும்  எல்லாம்
வல்ல வேங்கடவனை வணங்கி வாழ்க என வாழ்த்துகிறேன்
                                                              புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!




மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
              

Monday, January 14, 2013

புத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும் பொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்




புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய் பொங்கும்
      பொங்கலெனும்  தைமகளாய்  இல்லம்  தொட்டாய்!


வாழ்த்தியுனை   வரவேற்க  மனமே   இல்லை இன்றே
        வரலாறு   காணாத  வறட்சி   தொல்லை!
ஆழ்தியெமை  சென்றதாம்  சென்ற  ஆண்டே இங்கே
       ஆடுமாடும்    மேய்வதற்கா ? பயிரும்  ஈண்டே!

       புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!


பாலுண்டே   பழமுண்டே  பொங்கல்  வைக்க புதிய
    பச்சரிசி   உண்டா   பொங்கல்  வைக்க!
நாளுண்டு  வாழ்வதற்கு  உண்டா  உணவும் வரும்
     நாள்தோறும் காண்போமே  துயரக்  கனவும்!

        புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

மூலையிலே  தொழிலாளி  முடங்கி  விட்டான் நாள்
     முழுவதுமே  வேலையின்றி  துயரப்  பட்டான்!
ஆலையெலாம்  ஓடாது  புழுதி  படிய மக்கள்
      அனைவருமே  ஓயாது  அழுது  மடிய!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

சாலையோரம்  வாழ்பவனைப்  பார்க்கும்  போதும்-அவன்
      சாக்குப்பை  பாய்தண்ணில்  படுக்கும்  தீதும்!
மாலைமுதல்  காலைவரை  பனியில்  நடுங்க காண்போர்
       மனமெல்லாம்  ஐயகோ!  துயரில்  ஒடுங்க!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

தைபிறந்தால்  வழிபிறக்கும்  முன்னோர்  கூற்றே அதை
       தைமகளே  இனியேனும்  நீயும்   ஏற்றே!
கைகொடுத்து  காப்பாற்ற   வேண்டும்    தாயே-செய்யின்
      கரம்கூப்பி  தொழுவோமே  தெய்வம்  நீயே!

   புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

வற்றாது  காவிரிநீர்  வருதல்  வேண்டும் மேலும்
       வான்மழையும்   பருவத்தே  தருதல்   வேண்டும்!
கற்றார்க்கும்  ஏற்றபணி  கிடைக்க  வேண்டும் நாளும்
       கல்லாமைப்  படிப்படியாய் அகல வேண்டும்!

    புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

மின்வெட்டு  முற்றிலுமே  நீங்கச்  செய்வாய் ஏழை
      முகம்மலர  பசியின்றி   வாழச் செய்வாய்!
புண்பட்டுப்  போனோமே  சென்ற  ஆண்டே நல்ல
     புகழ்பெற்றுப்   போவாயா  ?  இந்த  ஆண்டே!

     புத்தாண்டே   நீவந்து  பிறந்து  விட்டாய்!

  உங்கள்  அனைவருக்கும்  என் அன்பான இனிய  புத்தாண்டு
பொங்கல் நல்  வாழ்த்துக்கள்!

                                  புலவர்  சா  இராமாநுசம்

      

Friday, January 11, 2013

முக்கிய அறிவிப்பு ! வேண்டுகோள் !




     இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கி  உள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    


                   பலநாளாய்  முகநூல்  தொடங்குமாறு   பல  நண்பர்கள் வற்புறுத்தியும்  எனக்கு அதில் விருப்பமில்லாக்  காரணத்தால்  தொடங்காமல்  இருந்தேன்.  ஆனால் தொடர்ந்து  அவர்கள்          வற்புறுத்தி வந்ததால் , நானும் தொடங்கியுள்ளேன்

          இனி, என்னுடைய  படைப்புகள்  முகநூலிலும்  வெளிவரும்  என்பதை  அன்போடு     தெரிவித்துக் கொள்கிறேன்.   வலைத்கண்  வரும்  உறவுகளைப் போலவே முகநூல் உறவுகளும் அதனை  படித்து  தங்கள்  கருத்துக்களை    வெளியிட, வேண்டி  விரும்பி  கேட்டுக்   கொள்கிறேன்

  
                 முகநூல்  முகவரி---


                                                        புலவர் குரல் இராமாநுசம்,

                                                                                நன்றி!

                                          புலவர் சா  இராமாநுசம்,

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...