Saturday, September 16, 2017

நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே!



நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே
நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே
நோக்கினால் தலைதானே சற்றும் நன்றே-உள்ளம்
நோகாத நிலைதானே வருதல் என்றே
தேக்கினார் பணிமுற்றும் முடங்கிப் போக-ஆள்வோர்
தினச்சண்டை ஏட்டிக்கி போட்டி யாக
ஆக்கினார் ஆட்சியை நாசம் அந்தோ-மக்கள்
அல்லாட விலையேற்றம் உயரும் அந்தோ


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 14, 2017

நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும் நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும்
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பார்ப்பீரய்யா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீர்ப்பீரய்யா
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, September 12, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும் நலமுற வந்தாய் தமிழ்மணமே!




நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும்
  நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே விட்டதோ தமிழ்மணமே-என்றே
  நினைத்தவர்  மனதில் தமிழ்மணமே
நன்றே நிம்மதி தமிழ்மணமே-நீயும்
  நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
  நவின்றேன் வாழ்க தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்

Saturday, September 9, 2017

ஓட்டுப்பட்டைக் காணவில்லை தமிழ்மணமே-ஏனோ உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே!





ஓட்டுப்பட்டைக்  காணவில்லை  தமிழ்மணமே-ஏனோ
  உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே
காட்டுகின்றாய் பட்டியலை தமிழ்மணமே-நேற்று
   காட்டியதே  மாறாமல்  தமிழ்மணமே
வாட்டுகின்றாய் எதற்காக தமிழ்மணமே-நாங்கள்
   வருந்துவதை அறிவாயா தமிழ்மணமே
மீட்டுவிடு முறைப்படியே தமிழ்மணமே-நீயும்
   மீண்டும்வர வேண்டுகிறேன் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, September 7, 2017

என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா




என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது
ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா—அதனால்
உளம்வருந்தி எழுதிவிட்டேன்! ! பாவிந்தா
சொன்னதென! மறந்துவிட !சுயநலமே ஓங்கிவிட
மன்னரென ஆளுகின்றார் கோவிந்தா- நானும்
மனமொடிந்து எழுதிவிட்ட பாவிந்தா
பின்னிருந்து தள்ளிவிட இரண்டுமே இணந்துவிட
பேச்சுமூச்சு ஏதுமில்லை கோவிந்தா உள்ளுக்குள்
புகையநெருப் பனையவில்லை பாவிந்தா
போகப்போக தெரியவரும் போலித்தனம் அறியவரும்
புல்லர்வேடம் புரியவரும் கோவிந்தா-காலம்
புலப்படுத்தும் காத்திருக்க பாவிந்தா


புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 6, 2017

முகநூல் பதிவுகள்!



உறவுகளே
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயஆட்சி என்ற கோரிக்கையை குறிக்கோளாக்ஃ கொண்டு கட்சி வேறுபாடு இன்றி மக்கள் அனைவருமே ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றால் தான்,இன்றைய
அரசியல் அவலங்களைப் போக்க முடியும்! செய்வார்களா!

இந்த செயலை இந்த வகையில்
இவன் செய்து முடிப்பான் என்று ஆய்வு
செய்து அந்த செயலை அவன் செய்ய விடுதல்
நன்று என்பதே வள்ளுவர் வாக்கு! மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்வோர் அறிந்து நடந்தால் சரி


மத்திய அமைச்சரவை விரிவாக்கப் பட்டு பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமனுக்கு அளிக்கப்பட்டுள்ளது! மிகவும் முக்கியமானது
பாதுகாப்புத் துறை, அது அதில் சற்றும் அனுபவம்
இல்லாதவரிடம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும்
கவலைக்குரியது ஏதோ பங்கு பிரிப்பதைப் போல
எதையும் எண்ணாமல் அமச்சரவை விரிவாக்கம்
நடந்துள்ளதே தவிர நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை


நீட் தேர்வில் விலக்குப்பெற ஆந்திர மாநிலமே நமக்கு முன்மாதிரி. அரசியலமைப்புச் சட்டத்திலேயே 32 வது திருத்தமான amendment of 371 D in 1974 அரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது என உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசும் பெற முயற்சித்திருக்கவேண்டாமா!?? எப்படி செய்வார்கள்! இங்கே ஆளும்
அமைச்சர்களுக்கு , தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதுதானே
முழுநேர வேலை! எத்தனை அனிதாக்கள் பலியானாலும் அவர்கள்
கவலைப்பட மாட்டார்கள்! மக்கள் எழுச்சி பெறாதவரை இதுதான்
நடக்கும்!
 
 


புலவர்   சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...