Friday, June 3, 2016

ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?



உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு
உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு
ஆதார மானதென காட்டும் சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே காரணம் ஆகும் –சாதிப்
புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்!
வண்மைமிகு சட்டத்தால் பயனே இல்லை! –நாளும்
வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ எல்லை!


ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா
ஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை
நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 1, 2016

அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே!



அன்பின் இனிய உறவுகளே-நீவீர்
அளித்த மறுமொழி ஆக்கங்களே!
என்பின் தோலென என்நெஞ்சில்-நன்றே
இணைந்திட ஓடின மனஅஞ்சல்!
இன்பின் வழிவரு ஊக்கத்தால்-கவிதை
எழுதுவேன் இயல்பென நோக்கத்தால்!
துன்பின் தொடர்பினை அறுத்தீரே-இன்றே
துவண்டிடா வண்ணம் தடுத்தீரே!

 
புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 31, 2016

ஏனோ தெரிய வில்லை –என்ன எழுதுவது புரிய வில்லை!



ஏனோ தெரிய வில்லை –என்ன
எழுதுவது புரிய வில்லை
தானே ஓடி வரும் –கருத்து
தடுமாற துன்பம் தரும்
மானோ மருண்ட தென்றே – எந்தன்
மனமின்று இருண்ட தின்றே
கானோ அறியதே நானும் –நொந்து
கலங்குவதை நீரறிய வேணும்


புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 24, 2016

நடந்தது நடந்து போக –இனியே நடப்பது நலமாய் ஆக!


நடந்தது நடந்து போக –இனியே
நடப்பது நலமாய் ஆக
அடமது துளியும் இன்றே- புதிய
ஆட்சியை நடத்திச் சென்றே
விடமது ஏறல் போன்றே –நாளும்
விலைவாசி உயரா ஒன்றே
தடமது காண வேண்டும் –ஆட்சி
தழைத்திட செய்வீர் ஈண்டும்


எதிர்கட்சி என்றால் எதையும் -உடனே
எதிர்ப்பது அல்ல அதையும்
மதிப்பது அளித்து ஆய்ந்தே-நாட்டு
மக்களின் நலமது ஓர்ந்தே!
விதிப்படி ஏற்றுக் கொண்டோ-அல்லதன்
விளைவினை விளக்கி விண்டோ
கொதிப்பது இன்றி அவையை-இருவரும்
கொள்கையாய் நடத்தின் சுவையே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 18, 2016

போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார் கேட்டாலும் கிடக்காது ஒட்டே!



போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார்
கேட்டாலும் கிடக்காது ஒட்டே!
வாட்டாது வாழ்விக்கும் அரசே-அடுத்து
வருமென்று கொட்டுக முரசே!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, May 15, 2016

வள்ளுவர் வாக்கு குறள் வழி நோக்கு!


உறவுகளே!
         வள்ளுவர் வாக்கு!

       கெடுதல் இரண்டு வகையில் வரும்! செய்யாத் தகாத செயலை செய்வதனாலும் வரும்! செய்ய வேண்டிய செயலைத் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது விட்டாலும் வரும்
                               எனவே
        இச் செயலை இந்த வகையில் இவன் செய்வான் என்பதை ஆய்ந்து அச் செயலை அவனுக்குத் தருவது நன்று!
 

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்! உங்களுப் புரிந்தால் சரி!

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!



இடையில் இருப்பது இருநாளே-மேலும்
எண்ணில் தேர்தல் திருநாளே
தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும்
தவறின் பின்னர் வாடுதலே
விடையில் கேள்வி ஆகிவிடும்-என்றும்
வேதனை மிகுதியாய் நோகவிடும்
படையுள் வீரரின் கைவாளாய் -வாக்கைப்
பயன்தர ஆவன செய்வீரே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...