Monday, May 1, 2017

உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து உரைத்திட்ட மேதினமே வருக உன்னை



உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து
உரைத்திட்ட மேதினமே வருக உன்னை
திலகமென வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க-எட்டு
திசையெங்கும் மங்காதுன் புகழே சூழ்க
நலமிகவே நாடெங்கும் வளமை ஓங்க-ஆட்சி
நல்லோர்கள் ஆளவர வறட்சி நீங்க
கலகமது இல்லாமல் அமைதி பூண- உலகம்
காணட்டும் போரின்றி ஒற்றுமை காண!


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 30, 2017

மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன் மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?



உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட  அழிதல் நன்றோ!?


புலவர் சா இராமாநுசம்

Friday, April 28, 2017

ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம் இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்



ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம்
இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்
காக்கவொரு அரசில்லை இன்றே இங்கே -மக்கள்
கண்ணீரில் மிதப்பதன்றி வாழ்தல் எங்கே
ஆக்கமின்றி உள்ளதும் அழிந்து போக –நாளும்
அல்லல்பட்டு தீராது உயிரும் சாக
!நோக்கமெலாம் பணம்பதவி ஆட்சி என்றால் –ஆள்வோர்
நோக்குவரோ!? மக்கள்நலன்! இவ்வண்  சென்றால்


புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 26, 2017

எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும் எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்



எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும்
எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்
பித்தரைப் போல பேசுவர்! பலரும்-ஏனோ
பின்னர் அதனை மாற்றுவர் சிலரும்
சித்தம் கலக்கும் செய்திகள் செப்பிட- சற்றும்
செயல்படா அரசுக்கு நிகரென ஒப்பிட
இத்தரை தன்னில் எதுவுமே  இல்லை-அந்தோ
இறைவா காக்க வந்திடு ஒல்லை!


புலவர் சா இராமாநுசம்

Saturday, April 22, 2017

கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்!



கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
பெற்றாரைத் தெய்வமெனப் வணங்க வேண்டும்
பிறர்நோக பேசாது இருத்தல் வேண்டும்
உற்றாரை அரவணைத்து வாழ்தல் வேண்டும்
ஊர்மெச்ச நல்லவராய் நடத்தல் வேண்டும்
அற்றாரின் அழிபசியைப் போக்க வேண்டும்
ஆணவத்தை அடியோடு நீக்க வேண்டும்


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 18, 2017

காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம் கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்!



காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம்
கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்
நாணாது பொய்சொல்லி திரிய வேண்டாம்
நயவஞ்ச காரரொடு தொடர்பே வேண்டாம்
வீணாக பொழுதெல்லாம் கழிக்க வேண்டாம்
வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்
பேணாது பொருள்தன்னை அழிக்க வேண்டாம்
பிறர்பொருளை கேட்காமல் தொடவே வேண்டாம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 16, 2017

மனிதா மனிதா ஏமனிதா-நாளை மரணம் வந்தே நெருங்குமுன்னே!



மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்


பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
  
புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...